காடுவெட்டி குரு இருந்தபோதும் அதிரடிகளின் மையப்புள்ளியாக இருந்தார், இறந்த பின்னும் பரபரப்புகளின் மையப்புள்ளியாகவே இருக்கிறார். அதிலும் இவரது இறப்பை மையப்படுத்தி இப்போது எழுந்திருக்கும் புகார்கள் ஒவ்வொன்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை பெரிய அளவில் சர்ச்சைக்கு ஆளாக்கியும், காயப்படுத்தியும் வருகிறது.

 

காடுவெட்டி குருவின் இறப்பிற்கு மிக முக்கிய காரணமே ராமதாஸ், அன்புமணி இருவரின் அலட்சியமும், அக்கறையற்ற தன்மையும்தான் என்று அவரது ரத்த சொந்தங்கள் கொதிப்பாய் கூறிவருகின்றனர். இந்நிலையில் காடுவெட்டி குருவின் நெருங்கிய உறவினரான வி.ஜி.கே.மணி என்பவரை பா.ம.க.விலிருந்து சமீபத்தில் கட்டங்கட்டி நீக்கினார்கள். வெளியே வந்த வி.ஜி.கே.மணி, சும்மா இருப்பாரா? காடுவெட்டி குரு இவருக்கு சின்னமாமனார் முறை வேறு. பேட்டிகளில் ராமதாஸை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்.

 

காடுவெட்டி குருவின் அம்மா, மகள், மகன், மருமகன் உள்ளிட்டவர்கள் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணியின் கட்டுப்பாட்டில்தான் தற்போது இயங்குகிறார்கள். ராமதாஸுக்கு எதிராக புதிய வன்னியர் சங்கத்தைத் தொடங்கும் திட்டத்தில் டெல்டா பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பாமக துணைத் தலைவராக இருந்த ம.க.ஸ்டாலினையும் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கினார்கள். 

வி.ஜி.கே.மணியுடன் சேர்ந்து ம.க.ஸ்டாலினும் இப்போது டெல்டா மாவட்டங்களில் வன்னிய சொந்தங்களை அணிதிரட்டி வருகிறார்கள். இவர்கள் இருவராலும் டெல்டா மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு சரிய ஆரம்பிக்க, திகைத்து போட் கிடக்கிறார்கள் டாக்டர்கள் இருவரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதனை சரிக்கட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அவர்களை சமாளிக்க ராமதாஸும் அன்புமணியும் டெல்டா மாவட்டங்களில் பாமக தொண்டர்களை சந்திக்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.