பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்த பிறகு பழனிசாமியை, சசிகலா முதல்வராக்கினார் தெரியுமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக நேற்று, வாணியம்பாடி உள்ளிட்ட பல இடங்களில்  வாக்கு சேகரித்த ஸ்டாலின் பேசியதாவது; அதிமுக எட்டு வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக இருக்கும் பழனிசாமி, தாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள், சாதனை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தால் அதை வரவேற்போம். 

ஆனால், அதைச் சொல்லி வாக்கு சேகரிக்கவில்லை. ஏனெனில் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கிறார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது என்றுதான் அவர் சொல்கிறார். நான் கனவு காணவில்லை. விரைவில் அது நனவாக நடக்கப் போகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், சாதாரண தொண்டன் என்று தன்னை முதல்வர் கூறிக்கொள்கிறார். எம்பி.யாக, பலமுறை எம்எல்ஏ.வாக இருந்த அவர் தொண்டரா? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பணத்தைக் கொள்ளையடித்துக் கொடுப்பதற்காக 5 பேர் இருந்தனர். அவர்களில் இவரும் முக்கியமான ஒருவர். பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்த பிறகு பழனிசாமியை, சசிகலா முதல்வராக்கினார். 

ஏனென்றால் அவர்தான் பர்சென்டேஜை சரியாகக் கொடுப்பார், கொள்ளையடித்த பணம் அவரிடம்தான் இருக்கிறது என்பதால் அவ்வாறு செய்தார். செய்யாதுரை, சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ரெய்டில் சிக்கிய பணம், இவர் ஊழல் செய்த பணம்தான் என்று கூறினார்.