பாஜகவுடன் நான் பேசிவருவதாக தமிழிசை சொன்னது ஒரு பச்சை பொய். அப்படி நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலக தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க.வுடன் பேசி கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மை. ஒரு பக்கம் ராகுல், மற்றொரு பக்கம் சந்திரசேகர ராவ், மறுபக்கம் மோடியுடன் ஒருவர் மூலமாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என்று கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை உன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவுடன் நான் பேசிவருவதாக பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை அளித்த தமிழிசைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வியின் விளிம்பிற்கு பாஜக சென்றுவிட்டதால் குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்கின்றனர். பொய் பேட்டியை அளித்து தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக்கொண்டுவிட்டார். பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை நினைத்து வேதனைப்படுகிறேன். 

அதிமுக - பாஜக போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சி திமுக அல்ல. மோடியை கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி அவர் மீண்டும் பிரதமராகக்கூடாது என பரப்புரை செய்துவிட்டு எப்படி கூட்டணி வைப்பேன். ராகுல் பிரதமராக வேண்டும் என்பதில் திமுக இரட்டிப்பு உறுதியுடன் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.