தமிழகத்தில் திமுகவுடன் ராகுல்காந்தி கூட்டணி வைத்ததால் தான், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஏனெனில் மு.க.ஸ்டாலினின் ராசி அப்படி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் திமுகவினர். நாட்டை ஆள திமுகவுக்கு தகுதி இல்லை, முதல்வர் நாற்காலி மீது மு.க. ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான், உதயநிதிக்கு சட்டப்பேரவையிலேயே புகழ்பாடுகிறார்கள் என கடுமையாக சாடினார். 

மேலும், அவர் பேசுகையில், திமுகவினர் விஞ்ஞான மூளையைக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதியை அளித்து ஸ்டாலின் ஏமாற்றினார். இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மனதில் பதியச் செய்து திமுக வேலையாக உள்ளது. 

கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் மு.க. ஸ்டாலின். வீதியில் சட்டையை கிழித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள்? திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஏனெனில் மு.க.ஸ்டாலினின் ராசி அப்படி. நாட்டை ஆள்வதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை.  அதிமுகவை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இங்கு பெரும்பான்மை ஆட்சி நடைபெற்று வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.