ஆரணி தொகுதி எம்.பி.யான இவர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தின் நீண்டநாள் கோரிக்கையை வரலாற்று அறிவிப்பாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (எம்.பி.சி.) 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்ட வழிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், 1987ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபமும், வன்னிய சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகவும் திகழ்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபமும் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையப் போவது உறுதி. எனவே வன்னிய குல சத்திரிய மக்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது உறுதியாகி விட்டன. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டிவனத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவேன் என்று அறிவித்தார். ஆனால் துர்திஷ்டவசமாக அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டது.

வன்னியர்கள் கோரிக்கை அதிமுக ஆட்சியில் இத்தனை நாள்வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்திருந்தால் தனி உள்ஒதுக்கீடு கிடைத்திருக்கும். வன்னியர்களின் கோரிக்கைகள் பல நிறைவேறியிருக்கும். கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஏற்படுத்தப்பட்டு வன்னிய சமுதாயத்திற்கு 20 சதவீத ஒதுக்கீடும், இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சமும், மாதந்தோறும் பென்ஷன், ஐயா எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாருக்கும் சென்னை மையப்பகுதியில் சிலை மற்றும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் பதவிகளில் அமர்த்தியது, துணைவேந்தர்கள் நியமனம், வன்னியர்கள் மீதுள்ள வழக்குகள் வாபஸ் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எந்தவொரு வன்னிய சமுதாய அமைப்புகளும் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தவில்லை. ஆனால் தானாகவே முன்வந்து வன்னியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று அறிவித்துள்ளார். மீண்டும் மனதார பாராட்டுகிறேன். நன்றி சொல்லவே வார்த்தைகள் இல்லை. வன்னியர்களை வைத்து தங்களை முன்னிலைப் படுத்தி கொண்டிருப்பவர்கள் ஆளும் கூட்டணியில் இருந்தாலும் வன்னிய சமுதாயத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றுத் தரவில்லை. ஆளும் அதிமுகவும் உள்ஒதுக்கீடு, மணிமண்டபம் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோன்று இன்றைய அதிமுக ஆட்சியில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எந்த நிலையில் இருக்கிறார்கள். உப்புசப்பு இல்லாத துறைகளில்தான் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஒரு துணைவேந்தர் உண்டா? அரசு தேர்வாணைய துறையில் பூஜ்ஜியம், இந்த நிலைதானே இன்றைக்கு இருக்கிறது. போராடி பெற்றுத்தரக்கூட யாரும் முனவரவில்லையே. திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட நிலை இருந்ததா? என்பதையெல்லாம் வன்னிய மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்பொழுது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில்தான் இடஒதுக்கீடு, சாலை மறியல் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றது. அந்த பகுதியில் 7,8 பேர்கள் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அந்த தியாகிகளுக்கு மணிமண்டபமும், எந்த நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்களோ அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து சமுதாயத்தினரின் நலன் மீதும் அதிக அக்கறை கொண்டவர்கள். சமூக நீதி, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்திற்கு உறுதியாக உள்ளவர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில்தான் மதக்கலவரம், இனக் கலவரமில்லாத ஒரு தமிழகம்  சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கும். மீண்டும் ஒருமுறை மு.க.ஸ்டாலின் சமூகநீதியை கட்டி காத்தமைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

வன்னியர் உள் தனி ஒதுக்கீடு, தியாகிகளுக்கு மணிமண்டபம்  என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிராக வன்னியருக்கு கருணாநிதி செய்த துரோகங்களை பட்டியலிட்டு ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து அன்புமணி மைத்துனரை வைத்து  ராமதாஸின் கண்ணைக் குத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.