கருணாநிதி பிறந்த நாளன்று ஜூன் 3ஆம் தேதி தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மேலும் அன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று  அறிவாலய வட்டாரங்களில் அனல் பறக்கும் பேச்சு கிளம்பியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் மறைந்ததால்தான் இடைத் தேர்தல் வந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் மறையவில்லை எனினும் இடைத் தேர்தல் நடைபெற்றிருக்கும். 

ஏனென்றால் ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று  கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று கோர்ட்டுக்கு சென்று வெற்றி பெற்ற சரவணன்தான் இப்போது திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்றார்.

தொடர்ந்து, ஏற்கனவே கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மோடி ஆட்சிக்கு முடிவு கட்டக் கூடிய வகையில் வாக்களித்துள்ளீர்கள். அதன் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வர இருக்கிறது. அதேபோல 22 சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினம் வரவுள்ளது. 

திமுக கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு தேவை 118 இடங்கள். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும். அப்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார், கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும் என்று பேசினார்.