மத்தியில் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தினமும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள். அதில் சனிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உத்தரபிரதேசத்தில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ.க. தொண்டர்கள் முறியடிக்க வேண்டும் என கூறினார். 

மேலும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ.க. உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க விரும்பவில்லை என்றார். 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியை கேலி செய்துள்ளார். திங்கட்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார், செவ்வாய்க்கிழமை அகிலேஷ் யாதவ், புதன்கிழமை மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை சரத்பவார், வெள்ளிக்கிழமை தேவேகவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் ஆகியோர் பிரதமர்களாக இருப்பார்கள். வாரத்தின் 6 நாட்களில் 6 பேர் பிரதமர் பதவியை வகிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை நாளாக அமைந்துவிடும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.