அப்பா கருணாநிதிக்கு நிகராக அரசியலின் எந்த விஷயத்தில் செயல்படுகிறாரோ இல்லையோ ஆனால் இந்துக்களை விமர்சிப்பதில் மிக நிறைவாக செயல்படுகிறார் மகன் ஸ்டாலின். மத மூடத்தனம்! எனும் பெயரில்  இந்துக்களை மட்டும் உரசி ரத்தம் வரவைத்துவிட்டு, சிறுபான்மையினரின் செயல்களை தடவிக் கொடுக்கும் தந்திரத்தை தெளிவாக செய்கிறார்!என்று மிக கடுமையான விமர்சன தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருந்தார் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின். 


கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய திருமண வீட்டில், இந்துக்களின் திருமணத்தில் புரோஹித முறையை விமர்சித்து பேசி கடும் கண்டனத்தில் சிக்கினார். அதே போல் கடந்த வாரமும் இப்படி இந்துக்களின் திருமண முறை குறித்து விமர்சனங்களை வைத்து வம்பை விலைக்கு வாங்கினார். 

பா.ஜ.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்று இந்து மதத்தில் நம்பிக்கையுடைய கட்சிகள் மட்டுமில்லை! சாதாரண மனிதர்கள் கூட சோஷியல் மீடியாவில் ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடிக்க துவங்கினர் இந்த விவகாரத்தில். இதை கவனித்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் ‘தலைவரே அரசியல் சுழ்நிலை நமக்கு சாதகமாக இருந்துட்டு இருக்கிற நேரம் இது. மத்திய, மாநில அரசுகள் மேலே இருக்கிற கோபத்துல பல தரப்பு  மக்களும் நம்மை விரும்புறாங்க. ஆனா இந்த நேரத்துல இந்துக்களுக்கு எதிரா நீங்க வைக்கிற விமர்சனங்கள் நமக்கு பெரிய பாதிப்பை  உருவாக்குறது உறுதி. பொதுவாகவே நமக்கு இந்துக்கள் வாக்கு வங்கியின் சில சதவீதமாவது கிடைக்குமாங்கிறது டவுட். இதுல உங்களோட பேச்சு அவங்களை மொத்தமாவே நம்மை வெறுக்க வெச்சுடுமோன்னு கவலையா இருக்குது!’ என்று நைஸாக பதற்றத்தை காண்பித்துள்ளனர். 


இதன் பிறகு யோசித்த ஸ்டாலின், ‘ஓ.கே. இனி தவிர்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, இப்போதைக்கு இந்துக்களை கூல் பண்ணிட சில யோசனைகளையும் சொல்லியிருக்கார். அதன் படி தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், தி.மு.க. ஒன்றும் இந்துக்களுக்கு விரோதி அல்ல! என்று வாலண்டியராக பிரசாரம் செய்ய துவங்கியுள்ளனர். 
அந்த வகையில் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவும் “நாங்கள் எப்பவும் இந்துக்களின் எதிரியல்ல. வர்ணாசிரமத்துக்குதான் நாங்கள் எதிரி. சமூக நீதி அடிப்படையில் சமத்துவம் பேணக்கூடிய இயக்கம்தான் இது. எந்த சமூக மக்களுக்கு துன்பம் நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்போம். 

நாங்கள் சி.ஏ.ஏ. மசோதா எதிர்ப்பு விஷயத்தில் இந்துக்களுக்கு எதிராக செயல்படலை. அவங்களோட நலனுக்கும் சேர்த்துதான் போராடுறோம். பத்தொன்பது லட்சம் பேர் அஸ்ஸாம் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதில் பனிரெண்டு லட்சம் பேர் இந்துக்கள்.  நாங்கள் அவங்களுக்கும் சேர்த்துதானே போராடுகிறோம்! அப்படியானால் நாங்கள் இந்துக்களின் விரோதியா அல்லது நண்பனா!? சொல்லுங்கள். 

மண்டல் கமிஷனை எதிர்த்தது நாங்களா அவர்களா? பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பார்வையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் எல்லாம் சூத்திரர்கள். நாங்கள் அந்த சூத்திரர்களுக்காகதானே போராடுகிறோம். அப்படியானால் நாங்கள் இந்துக்களின் விரோதியா அல்லது நண்பனா? தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் அதிகம் பயனடைவது இந்துக்கள். அதனை எதிர்ப்பது பா.ஜ.க. ஆதரிப்பது தி.மு.க! அப்படியானால் நாங்கள் இந்துக்களின் நண்பனா, விரோதியா? இப்போது புரிகிறதா தலைவர் ஸ்டாலினோ, தி.மு.க.வோ என்றுமே இந்துக்களின் எதிரியில்லை என்று.” என  அழுத்தம் காட்டியிருக்கிறார் புள்ளிவிவரத்துடன். 
அப்ப தி.மு.க. இந்து விரும்பிதானா!?