தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகி கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 64603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35339 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனை, தரமான சிகிச்சை, சிறப்பான கட்டுப்படுத்தும் பணிகள் என கொரோனாவை தடுத்து விரட்டுவதில் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது தமிழக அரசு. 

இந்த பணிகளுக்கு இடையே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல திட்டங்களையும் செய்துவருகிறது. ஆனாலும் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துவருகிறார். 

கொரோனா தமிழ்நாட்டில் பரவ தொடங்கியது முதலே, தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஊரடங்கு நீட்டிப்பு ஆகிய விவகாரங்களில் அரசு, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு எடுத்த பின்னர், தாங்கள்(திமுக) சொல்லும்போது கேட்காமல், காலம் தாழ்ந்து தாங்கள் கூறிய அறிவுரைகளை அரசு செயல்படுத்துகிறது என்று ஸ்டாலினும் திமுக மூத்த தலைவர்களும் கூறிவருகின்றனர். அரசு எடுக்கும் முடிவுகளின் கிரெடிட்டுகளையும் திமுக எடுத்துக்கொள்ளும் விதமாக இதுபோன்று தொடர்ந்து ஆளும் அதிமுக அரசை விமர்சித்துவருகிறார் ஸ்டாலின். 

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, என்ன செய்தாலும், அதை விமர்சிப்பது மட்டுமல்லாமல், முதல்வரோ மற்ற அமைச்சர்களோ என்ன கருத்து சொன்னாலும் அதை விமர்சித்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். 

கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்ற கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி, கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்ததையும் விமர்சித்திருந்தார். கடவுள் மீது பழியையும் பாரத்தையும் இறக்க அரசு முயற்சிப்பதாக விமர்சித்திருந்தார். 

மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதிலேயே எடப்பாடி அரசு கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். மக்களின் மீது கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், மக்கள் வாழ்வா சாவா என்ற பீதியில் உறைந்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் புதிதாக விக் ஒன்றை வைத்துள்ளார். 

மக்கள் மீது அக்கறை காட்டும் ஒரு தலைவர் செய்யும் வேலையா இது..? உடற்தோற்றத்துக்கும் இளமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நேரமா இது..? இக்கட்டான நேரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் செய்யும் காரியமா இது..? பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக அதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின், பேரிடர் காலத்தில் புதிய “விக்” மட்டும் வைத்துக்கொள்ளலாமா..? நெருக்கடியான நேரத்திலும் விக் வைத்துக்கொள்ளும் ஸ்டாலினுக்கு ஆளுங்கட்சியை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது..? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பொதுமக்களும் அரசியல் விமர்சகர்களும் முன்வைக்கின்றனர். 

ஆளுங்கட்சியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் தார்மீக உரிமையையும் தகுதியையும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இழந்துவிட்டதாகவே மக்கள் நினைக்கின்றனர். அரசியல் விமர்சகர்களின் பார்வையும் அதுவாகவே உள்ளது.