தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி. 

திமுக தலைமை மீது கடந்த சில ஆண்டுகளாகவே அதிருப்தியில் இருந்தார் வி.பி.துரைசாமி. இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜக தலைவர் முருகனை சந்தித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரசியல் ரீதியாக விவாதித்தனர்.
 
இந்த சூழலில், பாஜக தலைவர் முருகனை சந்தித்து அவர் பேசியதை அறிந்து திமுக தலைமை கோபம் கொண்டது. அவரிடம் ஸ்டாலின் தரப்பில் பேசிய போதும், முறையான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் தனது அதிர்ப்தியை திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரிடமும் வெளிப்படுத்தி இருக்கிறார் வி.பி.துரைசாமி. பாஜகவில் அவர் இணைய இருப்பதை திமுக தலைமை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைப்பொது செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பியை நியமித்திருக்கிறது அறிவாலயம்.
 
கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி. 
 இந்நிலையில் அவருக்கு தேசிய தாழ்ப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தமிழக பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.