நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்றால் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று ஸ்டாலின் தரப்பிடம் இருந்து இரண்டு கட்சிகளுக்கு தகவல் சென்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தி.மு.க காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் திமு.க கூட்டணியில் இருக்கிறோம் என்று வைகோவும், திருமாவும் கூறி வந்தாலும் அவர்கள் இருவரையும் தோழமை கட்சி என்றே தி.மு.க கூறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் இரண்டு கட்சிகளும் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் சக்திக்கு மீறிய விஷயங்களை கேட்பது தான் என்கிறார்கள்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தி.மு.கவை பொறுத்தவரை விசிகவிற்கு ஒரே ஒரு தொகுதி. அதுவும் விழுப்புரம் தொகுதி மட்டும் தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஆனால் சிதம்பரம் தொகுதி தான் வேண்டும் என்று திருமா பிடிக்கும் அடத்தால் தி.மு.க கூட்டணியில் விசிகவை உறுதிப்படுத்தாமல் வைத்துள்ளார்கள். 

இதேபோல் வைகோவும் நான்கு தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் தி.மு.கவோ ஒரே ஒரு தொகுதி மிஞ்சிப் போனால 2 தொகுதி என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் ஈரோடு மற்றும் தேனியை ம.தி.மு.கவிற்கு கொடுக்க தி.மு.க விரும்புகிறது. ஆனால் வைகோவோ காஞ்சிபுரம் தொகுதியை எதிர்பார்க்கிறார். 

ஆனால் 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ள காஞ்சிபுரம் தொகுதிக்கு தி.மு.க வேட்பாளரை ஸ்டாலின் பைனல் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். இப்படியே கூட்டணி இழுத்துக் கொண்டே செல்வதாகல் கடைசி வாய்ப்பாக தி.மு.க கொடுக்க முன்வரம் தொகுதிகளை பெற்றுக் கொண்டால் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம், இல்லை என்றால் வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூற தி.மு.க தரப்பு தயாராகிவிட்டதாக கூறுகிறார்கள்.

 

நேற்று காலை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய ஸ்டாலின் கூட இதனை மனதில் வைத்தே பேசினார். தற்போது நாங்கள் ஒரு கூட்டணி அமைத்துள்ளோம். சில தோழமை கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணியில் இணைக்க வாய்ப்பு உள்ளது என்று ஸ்டாலின் பேசியுள்ளார். அதாவது தோழமை கட்சிகளை உறுதியாக கூட்டணியில் சேர்ப்போம் என்று ஸ்டாலின் கூறவில்லை. மாறாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ..இந்த ஒன்றே போதும் ஸ்டாலின் விசிக மற்றும் வைகோவுக்கு கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று கூறுவதற்கு என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.