பொதுவாகவே எந்த செயலை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நாள் நட்சத்திரம் சகுனம் என பார்த்து பார்த்து தான் செய்வார்கள் நம் மக்கள். ஆனால் பெரியார்வாதியான கருப்பு சட்டைகாரர்களுக்கு இது பொருந்தாது. மூட நம்பிக்கைகள் என இது போன்ற செயல்களை ஒதுக்கி விட்டு துணிந்து நல்ல காரியங்களை நேரம் காலம் பார்க்காமல் செய்வார்கள்.

நல்லது செய்ய நேரம் எதுக்கு? காலம் எதுக்கு? என கேட்கும் பகுத்தறிவாளர்களும், பகுத்தறிவையே கொள்கையாகவும் கொண்டிருக்கும் திராவிட தலைவர்களின் வழி வந்த கழகத்தினர் இன்றளவும் தங்கள் வாழ்க்கையில் எந்த வித மூட நம்பிக்கைகளும் இன்றி துணிந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

அந்த பகுத்தறிவை தொண்டர்களுக்கு போதிப்பதோடு நில்லாமல் தங்கள் வாழ்க்கையிலும் இன்று நடைமுறைபடுத்தி காட்டி இருக்கின்றார் திமுக தலைவர் ஸ்டாலின் .திமுகவின் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஏற்ற தலைவர்களை தேர்வு செய்திட திமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்றது. திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் என திமுகவினர் அறிவாலயத்தில் இன்று  அணி திரண்டிருந்தனர். 

திமுக வரலாற்றிலேயே இன்றைய நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. 
இதனால் பல முக்கிய திமுக புள்ளிகள் அங்கு கூடி இருந்தனர். அவர்கள் முன்னிலையில் , திமுகவின் தலைவராக ஸ்டாலின் எவ்வித போட்டியும் இன்றி அங்கிருந்த அனைவராலும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

1307 திமுகவினர் முன்மொழிய, வழிமொழிய ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற தருணம் திமுகவிற்கு மிக  சிறப்பான தருணம். அவர் பதவி ஏற்றதும் அந்த அரங்கில் இருந்த அனைவருமே தங்கள் மகிழ்ச்சியை கரவொலி எழுப்பி தெரிவித்ததில் அரங்கமே அதிர்ந்தது.  இந்த பொதுக்குழுவில் வைத்து திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

ஒரு மாபெரும் அரசியல் கட்சிக்கு ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கும் இந்த தருணம் நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறிக்கப்பட்டு அமைந்ததல்ல. உண்மையை கூற வேண்டும் என்றால் இன்றைக்கு செவ்வாய் கிழமை. பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்தையும் செவ்வாய் அன்று துவங்க மாட்டார்கள். அதே போல தேய்பிறை தினமான இன்று நாள் முழுவதும் மரணயோகம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் வேறு.

 

மொத்தத்தில் இன்றைய தினம் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் உகந்ததாக சாஸ்திரம் கூறவில்லை. ஆனால் பகுத்தறிவாளர்களான திமுகவினர் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் குறித்து இன்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

ஸ்டாலினும் , துரைமுருகனும்  பதவி ஏற்றிருப்பதும் இன்றைய தினத்தில் தான். ஸ்டாலின் பதவி ஏற்பு அறிவிக்கப்பட்டு முடியும் போது, எமகண்டமும் முடிந்திருக்கிறது. மொத்தத்தில் இந்த சாஸ்திரங்களை எதையும் கண்டு கொள்ளாமல் உண்மையான பகுத்தறிவாளர்களாக இண்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்.