திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உடன்பிறப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். திமுக செயற்குழுவில் ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த பதவிக்கான தேர்தல் 28-ம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி திமுக தலைவராகிறார் என்று அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இதில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உச்சிக்கு சென்றுள்ளனர்.

பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து திமுகவை அண்ணாதுரை தொடங்கியபோது, அவருக்கு மதிப்பு கொடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. அண்ணா மறைந்தபோதும் தலைவர் என்ற பதவியை புதிதாக உருவாக்கி கடந்த 1969-ம் ஆண்டு முதல் அப்பதவியில் நீடித்து வந்தார் கருணாநிதி. இந்நிலையில் அவரது மறைவுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.