மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியையும், மாநிலத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியையும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, விமர்சித்துவருகிறார்.

அரசியல் சாணக்கியர் என்று பெயர் பெற்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வழிநடத்திய திமுக என்ற மாபெரும் இயக்கம், இன்று பிரஷாந்த் கிஷோர்&கோவின் ஆலோசனையை பெற்று செயல்பட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றாலும், கருணாநிதி என்ற மிகப்பெரிய அரசியல் சாணக்கியர் வழிநடத்திய கட்சிக்கு இந்த நிலை வந்தது துரதிர்ஷ்டவசமானதுதான்.

பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். அந்தவகையில், ஆளும் அரசுகளின் திட்டங்கள் மீதான எதிர்ப்பை டிஷர்ட்டின் மூலம் காண்பிப்பது என்பது டிரண்டாகியுள்ள நிலையில், இது எடுபடுமா, காமெடியாக இருக்காதா என்பதையெல்லாம் உணராமல், அதை செய்துகொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். 

கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டபோதிலும், அதிமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் மீது மிகுந்த அக்கறை இருப்பதை போல காட்டிவந்தார். ஆனால், மக்கள் கொரோனா அச்சத்திலும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தலையில் விக்கு வைத்து தனது உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்டாலினின் செயல் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அதுமட்டுமல்லாது, மும்மொழிக்கொள்கை, சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தியாக டிஷர்ட் அணிவதை பயன்படுத்துவது பெரும் கேலிக்கூத்தாகியுள்ளது. 

சினிமா பிரபலங்கள் தங்களின் எதிர்ப்பை டிஷர்ட்டில் காட்டுவது பிரச்னையில்லை. ஆனால் திமுக என்ற தமிழகத்தின் பெரிய இயக்கத்திற்கு, ஆளுங்கட்சிகளின் திட்டங்கள் சரியில்லை என்றால், அதை மக்களிடத்தில் கொண்டுசேர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அபத்தமாக, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்டை அணிவது, அதையும் ஒரு ஃபோட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பரப்புவது என்பது அபத்தத்திலும் அபத்தம்.

கடந்த வாரம் ”தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் பொரிக்கப்பட்ட டிஷர்ட்டை அணிந்துகொண்டு சைக்கிள் பயணம் செய்து ஃபோட்டோஷூட் நடத்தி, டிரெண்டிங்கில் இருப்பதற்காக சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இப்போது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "Ban NEET" என்ற வாசகத்துடன் கூடிய டிஷர்ட்டை அணிந்து ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கொரோனாவால் மக்கள் பலவகைகளில் அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், டிசைன் டிசைனாக டிஷர்ட்டை அணிந்து ஸ்டாலின் ஃபோட்டோஷூட் நடத்துவதிலிருந்தே, மக்கள் மீதான அவரது அக்கறை எந்தளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்று பலரும் தங்களது விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திவருகின்றனர்.