அதிமுக தோல்வி பயம் காரணமாகவே திமுகவின் கிராம சபை கூட்டங்களை அரசு நடத்த விடுவதில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேளாண் சட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்;- வேளாண்மை சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலையை ஏற்றி ஏழை எளிய மக்களின் வாழ்வை நசுக்குகிறது.

அதிமுக அரசு மக்கள் நலனின்றி சுயநலத்தோடு செயல்படுகிறது. இந்த தேர்தலோடு அதிமுக என்ற ஒரு கட்சி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் எதிர்க்கட்சியினர் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், எடப்பாடியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவில் பல தலைவர்கள் அதிருப்தில் இருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்பார் என்றும் வேல்முருகன் கூறினார்.