Asianet News TamilAsianet News Tamil

சந்தர்ப்பவாதம் பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்லை.. உங்கள் லட்சணத்த கூவத்தூரிலேயே பார்த்தாச்சு.. மு.க.ஸ்டாலின்

யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை, எல்லாம் எனக்குத் தெரியும், தானே எல்லாம்” என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைத் தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது.

MK Stalin Condemned edappadi palanisamy statement
Author
Tamil Nadu, First Published Apr 12, 2020, 1:46 PM IST

தமிழக மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய சுகாதாரப் பேரிடர்ப் பிரச்சினையில், சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி - பிறகு சுகாதாரச் செயலாளரை முன்னிலைப்படுத்தி - அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித்தொடர்பாளராக மாற்றி கழுத்தறுப்பு அரசியலை முதல்வர் செய்து கொண்டிருகிறார் என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து எழுதிய கடிதத்தை சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது திமுக என முதல்வர் பழனிசாமி பதில் அறிக்கை மூலம் விமர்சித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில்;- கொரோனா தனது கோரமுகத்தைத் தமிழகத்திலும் காட்டி, நம் மக்களிடையே சீர்குலைவை ஏற்படுத்திவரும் வரும் நிலையில், தமிழக அரசு அவசரகதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பல தளங்களிலும் பேசப்பட்டுவரும் சில கருத்துக்களை, முதல்வருக்குக் கடிதமாக அனுப்பி இருந்தேன். அதற்குப் பதில் என்ற பெயரில் நீண்ட அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டிருக்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு முதல்வரின் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்று, நான் அக்கறையுடன் விடுத்த அறிக்கைக்கு அவர் ஆத்திரத்துடன் பதில் தந்துள்ளார். அவரது அண்மைக்கால ஆத்திர குணம் அப்படி.

MK Stalin Condemned edappadi palanisamy statement

அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் நான் சித்தரிப்பதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். 'அரசு எதுவும் செய்யவில்லை' என்று நான் சொல்லவில்லை; 'அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக சார்பில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவோம்’. என்று தான் சொன்னேன். நேற்று மட்டுமல்ல, மார்ச் இரண்டாவது வாரம் முதல் சட்டமன்றத்திலும் சொன்னேன். எனது அறிக்கைகளிலும் சொல்லி இருக்கிறேன்; காணொலிகளிலும் சொல்லி இருக்கிறேன். நோயின் தீவிரத்தை உணர்ந்து எந்த அளவுக்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்றுதான் சுட்டிக்காட்டினேன். அதைக் கூட முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, பொங்கி வழிகிறார்.

“யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை, எல்லாம் எனக்குத் தெரியும், தானே எல்லாம்” என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைத் தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது.

“கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததுமே அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகின்றது” என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

“எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தி கண்காணிப்பில் வைத்தோம்” என்கிறார்.

பின்னர் அவரே, ''வெளியில் இருந்து வந்தவர்கள் சிகிச்சைக்கு தாமாக முன்வர வேண்டும்” என்று ஏப்ரல் 1-ம் தேதி பேட்டி கொடுத்தார். சோதனைச்சாவடி சோதனைகளை, விமான நிலைய சோதனைகளை ஜனவரியில் தொடங்கிவிட்டோம் என்றால் மூன்று மாதம் கழித்து, முதல்வர் எதற்காக இப்படி பேட்டி அளிக்க வேண்டும்?.

MK Stalin Condemned edappadi palanisamy statement

''ஜனவரி மாதத்திலேயே இந்த நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு அம்மாவின் அரசாகும்" என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக்கொண்டு முதல்வர் சொல்கிறார். ஆனால், ''ஒன்றரைக் கோடி முகக்கவசம், 25 லட்சம் 'என்-95' முகக்கவசம், 10 லட்சம் பாதுகாப்பு முகக்கவசம், 2500 வெண்டிலேட்டர், 30 ஆயிரம் சோதனைக் கருவிகள் வாங்கப்பட உள்ளது" என்று மார்ச் 30-ம் தேதி முதல்வர் பேட்டி கொடுத்தாரே? - எது உண்மை? இவையெல்லாம் வாங்குவதற்கு 3 ஆயிரம் கோடி பணம் வேண்டும் என்று ஏப்ரல் 3-ம் தேதிதான் பிரதமரிடம் பணம் கேட்கிறார் முதல்வர். எது உண்மை?

மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இதைத் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது, கேட்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தான் கேட்கிறேன். சந்தர்ப்பவாதம் பற்றி முதலமைச்சர் பேசலாமா? இவர், ஒன்று சுயபரிசோதனை (Self Introspection) செய்துகொள்ள வேண்டும், அல்லது கண்ணாடிமுன் நின்று சற்று பின்னோக்கிப் பார்த்து யோசிக்க வேண்டும். கூவத்தூர் முதல் கோட்டைவரை இவரது சந்தர்ப்பவாதத்தைப் பார்த்து, இவரது கட்சியினரே இவருடைய முதுகுக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியது திமுக. சட்டமன்ற நடவடிக்கைகளை ஒருமுறை திரும்பப் படித்துப் பார்த்தாலே அனைத்தும் முதல்வருக்குப் புரியும். அவர்தான் கடந்த காலத்தை மறந்து, எதிர்காலக் கனவில் நிகழ்காலத்தில் மிதப்பவராயிற்றே.

‘சட்டமன்றத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும்' என்று வைத்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, “போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டியதில்லை” என்று மார்ச் 17 அன்று அறிவித்தது யார்? - இதுதான் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமா?

“நோய் வருவது இயற்கை. அது தமிழகத்தில் அபாயகரமாக இல்லை” என்றும் “சட்டமன்றம் நடைபெற்றால்தான் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள்” என்றும் கூறியது யார்?

“அவையை ஒத்தி வைப்பது மக்களை பீதிக்குள்ளாக்கும்” என்று கூறிவிட்டு, பிறகு அவையை முன்கூட்டியே முடித்தது யார்? - இவையெல்லாம் முன்னுக்குப்பின் முரண்பட்ட காரியங்கள் இல்லையா?

நோயின் தீவிரத்தை உணராமல் முதலில் 60 கோடி மட்டும் நிதி ஒதுக்கியது யார்? பிறகு நான், “1000 கோடி ரூபாய் ஒதுக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்த பிறகு 500 கோடி ரூபாயாக உயர்த்தியது யார்? இதுதான் கொரோனாவின் கொடுமையை உணர்ந்ததற்கான ஆதாரமா?

அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று நான் முதலில் கோரிக்கை விடுத்த போது, கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் மார்ச் 24 அன்று அறிவித்துவிட்டு, தற்போது ஏப்ரல் 8 அன்று பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சேர்த்து மீண்டும் அறிவித்தது யார்? ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அரசு தொடர்ந்து செயலாற்றுகிறது என்று வெளிக்காட்டும் முயற்சி இல்லையா?, அந்த அளவுக்கு விளம்பர வெளிச்சம் முதல்வரை வேதனைப்படுத்துகிறது.

மார்ச் 24 அன்று சட்டமன்றத்தில் அரிசி ரேசன் கார்டுகளுக்கு மட்டும் 1000 ரூபாய் என்று கூறிவிட்டு, பிறகு மார்ச் 25 அன்று தொலைக்காட்சி உரையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் என்று அறிவித்தது யார்? - ஏன் இந்தக் குழப்பம்? அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என மார்ச் 29 அன்றே நான் கோரிக்கை விடுத்தபோது, “இது மருத்துவம் சார்ந்த பிரச்சினை. அரசியல் அல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை” என்று கூறி விட்டு ஏப் 3 அன்று அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியது யார்?

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் - 13 வகையான தொழிற்சாலைகளை திறக்க தலைமைச் செயலாளர் மூலம் ஏப் 7 அன்று உத்தரவு பிறப்பிக்க வைத்து, பிறகு அதே தேதியில் - சில மணி நேரத்தில் தொழிற்துறை முதன்மைச் செயலாளரை விட்டு தலைமைச் செயாலாளர் உத்தரவை ரத்து செய்ய வைத்தது யார்? யாருடைய தலையீட்டினால் இந்த மாற்றம்? இவை அனைத்துமே, கொரோனா குறித்து, தமிழக முதல்வருக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனால் தானே எல்லாவற்றையும் முன்னெடுத்துச் செய்வதாகக் காட்டிக்கொள்வதில் மட்டும் தணியாத ஆசை.

“நோய்த் தொற்று மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது” என்று ஏப் 9 அன்று முதலமைச்சர் ஒருபுறம் அறிவிக்கிறார். “நோய்த் தோற்று இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது” என்று 10-ம் தேதி தலைமைச் செயலாளர் அறிவிக்கிறார். தானும் குழம்பி, மக்களையும் குழப்பியது எந்த அரசு? இது என்ன புதுக் குழப்பம் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள்.

“கேரளாவிற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஆர்டர் கொடுத்து விட்டோம்” என்று கூறும் முதலமைச்சர், நேற்று பிரதமருடனான வீடியோ கான்பரன்ஸில், “பி.சி.ஆர்., ரேபிட் கிட்ஸ்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும்” என்றும், “பி.பி.இ, என்-95 மாஸ்குகள், வென்டிலேட்டர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டியதிருக்கிறது” என்றும் கூறியது ஏன்? உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதில் கூட இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட புதிய ஆதாரம் வேண்டுமா? அரைகுறையாகச் செய்துவிட்டு ஆத்திரம் வருவது ஏன்?

“இரு வருடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்றை தடுக்க பல கோடி ரூபாய்களை திமுக எம்.பி.,க்கள் இந்த நிதியின் கீழ் ஒதுக்கியிருந்த போதிலும், இந்த நிதியை நிறுத்திய மத்திய அரசை ஒரு வார்த்தை கண்டிக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது யார்? ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்தும் ஒரு கோடி ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்து ‘இரட்டை வேடம்’ தரித்து நிற்பது யார்?

இந்த நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தான் பயன்படுகிறது என்கிறார் முதல்வர். சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதி மக்கள் தேவை அறிந்து மக்களுக்காகத் தான் அந்நிதியை ஒதுக்கப் போகிறார்கள். உண்மை என்னவென்றால், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றி வரும் மக்கள் சேவையைத் தடுக்கும் சதிதான் இந்த நடவடிக்கையே தவிர வேறல்ல.

தமிழக மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய சுகாதாரப் பேரிடர்ப் பிரச்சினையில், சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி - பிறகு சுகாதாரச் செயலாளரை முன்னிலைப்படுத்தி - அவரையும் புறந்தள்ளி இப்போது தலைமைச் செயலாளரையே தனது செய்தித்தொடர்பாளராக மாற்றி கழுத்தறுப்பு அரசியல் செய்து கொண்டிருப்பது யார்? - எல்லாம் தமிழக முதல்வர் பழனிசாமிதான். இது என்னரக அரசியல்?

MK Stalin Condemned edappadi palanisamy statement

ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையிலும், பாஜக ஆளும் கர்நாடகம் முடிவெடுத்துவிட்ட பிறகும், “தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று நான் விடுத்த வேண்டுகோள் முதல்வருக்கு ‘அரசியலாகத்’ தெரிகிறது. ஊரடங்கை நீட்டிக்க ஏன் தயக்கம்? 'கரோனாவை' முழுமையாக ஒழித்துவிட்டாரா? மத்திய அரசு என்ன நினைக்குமோ என்று உள்ளூர பயம் தான் காரணம்!
மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உரிமைகளைக் காவு கொடுக்கும் இந்த சுயநலத்தாலும் கோழைத்தனத்தாலும் தமிழகம் இழந்த பெருமைகள் எத்தனையோ உண்டு. இப்போது உயிர்களையும் இழக்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.

மத்திய அரசிடம் முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும் அதன்பிறகும் 3,200 கோடி ரூபாயும் கேட்டவர் முதல்வர். அவர் சொல்லும் கணக்குப்படி மத்திய அரசு இதுவரை கொடுத்துள்ள தொகை 870 கோடியே 24 லட்சம் ரூபாய்தான். கேட்டதில் பத்தில் ஒரு பங்கு. மற்ற பங்கைக் கேட்பதற்கு முனைப்போ, முதுகெலும்போ இல்லாதவராக முதல்வர் இருக்கிறார்! நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் மக்களைப் பார்த்து நிதி கொடுங்கள் என்று அறிக்கை விட்டு கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். “100 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன்” என்று பேட்டியும் கொடுத்தார். எதற்காக இந்த நிலைமை? தனது உரிமையை முன்னிறுத்தி மத்திய அரசிடம் கேட்கக் கூடத் தைரியம் இல்லை. அதை மறைக்க மக்களிடம் கெஞ்சுகிறார், மக்கள் பிரதிநிதிகளாம் சட்டமன்ற உறுப்பினர் உரிமையில் கை வைக்கிறார்.

தமிழக அரசு கேட்ட நிதியைத் தாருங்கள் என்று நான் தான் அறிக்கை வெளியிட்டேன். பிரதமர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுத்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக வழங்குங்கள் என்று வாதாடினார். உண்மையில் முதல்வர் திமுக,வைப் பாராட்டி இருக்க வேண்டும். நன்றி தெரிவித்திருக்க வேண்டும். இதெற்கெல்லாம் முதல்வரிடம் இருந்து நன்றியை எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு மனிதர்களை அடையாளம் காணத் தெரியாதவன் அல்ல நான். நன்றி என்பது நாகரிகத்தின் அடையாளம். திமுகவையும் என்னையும் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் என்று கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார் என்றால் அவர் நடந்து கொள்ளும் தன்மைகள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. இவருடைய இரட்டை வேடம் நாடு நன்கு அறிந்ததே.

நீட் தேர்வில் இரட்டை வேடம், பத்து சதவிகித இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம், ஹைட்ரோகார்பனில் இரட்டை வேடம், இப்படி, ‘எடப்பாடி எத்தனை எடப்பாடிகளோ’ என்று கூறுமளவுக்கு, எல்லாப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போட்டு, கபட நாடகம். சோகமயமான சூழலில் இத்தகைய வஞ்சகமும் வன்மமும் கூடாது. நாடே துயரத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கும் வேளையிலே, ஆத்திரமும் ஆவேசமும் சத்ருவாகிவிடும் என்பதை உணர வேண்டும். பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நான் வைத்ததாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறார். எது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை அவரது பதிலில் தேடிப்பார்த்தேன்; கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 10-ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யவிருப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், தமிழகத்திற்கு வந்து சேரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் வந்து சேரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டேன். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டா?

MK Stalin Condemned edappadi palanisamy statement

''ஒரு லட்சம் டெஸ்டிங் கிட்டுக்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 8-ம் தேதிக்குள் அவை முழுமையாக தமிழகம் வந்து சேரும்" என்று ஏப்ரல் 2-ம் தேதி சுகாதாரத் துறை செயலர் சொன்னார். இதையே 6-ம் தேதி முதல்வரும் சொன்னார். பின்னர் '9-ம் தேதி வந்துவிடும்' என்றார் முதல்வர். இன்றுவரை வரவில்லையே? - என்ன காரணம்? முதல்வர் பதில் சொல்ல வேண்டாமா? “10-ம் தேதி முதல் அரைமணிநேரத்தில் பல லட்சம் பேருக்கு பரிசோதனை செய்வோம்' என்றாரே முதல்வர் என்ன ஆனது? “கொரோனா டெஸ்டிங் பொருட்களை மாநிலங்கள் தன்னிச்சையாக கொள்முதல் செய்யவும், இறக்குமதி செய்யவும் வேண்டாம். மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய முறையில் வழங்கும்” என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்திவிட்டதாகச் செய்தி வருகிறதே. இது உண்மையா?

ஜனவரி மாதமே தயார் நிலையில் இருந்தோம் என்று மார்தட்டிக் கொள்பவரைத் தான் கேட்கிறேன். ''கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 4-ம் தேதி முதலே இந்த ரேபிட் டெஸ்ட் கிட்-ஐ கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே கரோனா தொற்றில் இரண்டாவது இடத்திலுள்ள தமிழகம் இன்னும் இந்த ரேபிட் டெஸ்ட்டை நடைமுறைக்கு கொண்டு வராதது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது" என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு இருப்பது முதல்வர் காதில் விழவில்லையா?
 எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது" என்கிறார் முதல்வர்.

நான் வைத்துள்ள கோரிக்கைகள், ஆலோசனைகள் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தானே தவிர மருத்துவர்கள் மீதல்ல. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என களத்தில் நிற்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் சில மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுமளவுக்கு நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது என்ற கவலையில்தான் சொன்னேன். அதை உணராமல் தன் மீது விழும்பழியை துடைத்துக் கொள்ளும் வழி அறியாது, மருத்துவர்கள் மீது போட்டு தப்பி ஓடப் பார்க்கிறார் முதல்வர்.

MK Stalin Condemned edappadi palanisamy statement

இன்றைக்கு ஏதோ மருத்துவர்களின் ஒரே காப்பாளர் போல நடிக்கிறார் முதல்வர். ஆனால், தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கத்தோடு பணிமாற்றம் செய்யப்பட்ட 135 மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரைக்கும் பணிமாறுதல் செய்யாமல் பிடிவாதம் செய்வதற்குப் பின்னால் உள்ள ஆணவம், பழிவாங்கும் பாழ்பட்ட நோக்கம் அனைத்து மருத்துவர்களும் அறிந்ததுதான். அரசிடம் கோரிக்கை வைத்து போராடினார்கள் என்பதால் 135 மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ கொடுத்தது எடப்பாடி அரசு. அவர்களை வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கியடித்தது எடப்பாடி அரசு. இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்திமன்றம் போனார்கள். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , ''போராட்டத்தில் 18,000 மருத்துவர்கள் பங்கேற்ற நிலையில் 135 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களை தண்டிக்கும் நோக்கமே தவிர வேறு ஒன்றுமில்லை. சார்ஜ் மெமோ, பணி இடமாற்றம் ஆகிய உத்தரவுகளை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பளித்தார்.

பிப்ரவரி மாதம் 28-ம் தேதி இந்தத் தீர்ப்பு வந்தது. இதுவரைக்கும் அந்த மருத்துவர்களுக்கு பணியிடமாற்றம் வழங்கவுமில்லை. சார்ஜ் மெமோ திரும்பப் பெறவுமில்லை. இப்படிப்பட்ட இரக்கமற்றவர் தான், நான் ஏதோ மருத்துவர்களைக் குறைசொல்வதாகச் சொல்கிறார்.அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கப்படுமா என்று கேட்டபோது, “அவர்கள் பணிபுரியும் தொழிலில் தானே பணிபுரிகிறார்கள்” என்றும், ஆம்புலன்ஸ்  கோரிக்கைகள் பற்றிக் கேட்டபோது, “ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் என்றால் எனக்கு ஒன்னும் புரியவில்லையே” என்றும் கிண்டலடிப்பதுதான் ‘அம்மாவின் அரசா?’

அரசியலை எல்லாம் பேசுவதற்கான நேரம் இதுவல்ல; இன்றைய சூழ்நிலை என்பது நாடே துயர மன நிலைமையில் இருக்கிறது. இந்த நேரத்திலும் உண்மையைப் பேசாமலும், திரைமறைவு காரியங்களில் ஈடுபட்டும், வாய்க்கு வந்தபடி புள்ளிவிவரங்களை வாரி அடித்து விட்டும் மக்களது வாழ்க்கையில் இந்த அரசு விளையாடுமானால் அதைக் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும். மீண்டும் சொல்கிறேன், திமுகவைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்கு பல களங்கள் உள்ளன. பேரிடர் காலம் என்பது திசைத் திருப்பல் ஏதுமின்றி மக்களுக்காகப் பணியாற்றும் களம். ஆகவே, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க திமுக என்றைக்கும் தயாராக இருக்கிறது.

எனவே, பிரதான எதிர்க்கட்சியான திமுகவை கொச்சைப்படுத்தும் மலிவான மனவோட்டத்தையும், அநாகரிகமான அரசியலையும் கைவிட்டு, நெருக்கடிகள் மிகுந்த இந்த நேரத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று, மனித குலமே நடுங்கி நிற்கும் இந்தப் பேரிடரிலிருந்து தமிழக மக்களை மீட்டிட பொறுப்புள்ள முதல்வராக, கடமை உணர்வுடன் செயல்பட முன்வர வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.கொரானா காலம் முடிந்த பிறகே அரசியல் என்பதை எடப்பாடி நினைவில் ஏந்தி நடக்க வேண்டும்” என்று ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios