கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு தான் கூட்டணி பற்றி பேச முடியும் என்றும், கொள்கை அளவில் ஒத்து போயிருந்தாலும் தற்சமயம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என கூறினார். 

துரைமுருகனின் இந்த பேச்சு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட மற்ற கூட்டணி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து கூறுகையில், ‘துரைமுருகன் கூறியதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. திமுக காங்கிரஸ் வலுவாக உள்ளது’ என்றார். 

இந்நிலையில், திமுகவுடன் மதிமுக கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை ஸ்டாலின் சொல்லட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது பற்றி இன்று பேசிய வைகோ,’திமுகவுடன் மதிமுக கூட்டணி இல்லை என்று துரைமுருகன் அவருடைய கருத்தை சொல்லிவிட்டார். அவரது இந்த பேச்சு மதிமுகவினரை கலங்கடித்துள்ளது. இனி திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா இல்லையா என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்’ இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 3ஆம் தேதி மதிமுக நடத்தவுள்ள ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

இதுதொடர்பாக வைகோவுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு.ஆகவே எழுவரின் விடுதலையை காலம்தாழ்த்தும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து மதிமுகவும் திராவிடர் கழகமும் இணைந்து அறிவித்துள்ள ‘ஆளுநர் மாளிகை முற்றுகை அறப்போராட்டத்திற்கு’ பாராட்டைத் தெரிவித்து, அப்போராட்டத்தை வரவேற்கிறேன். டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இப்போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மனவருத்தத்தில் இருப்பதாக வைகோ கூறிய நிலையில், இது அவரை சமாதானப்படுத்தும் வகையில்தான் இக்கடிதம் திமுகவின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.