சண்டையில்லாத தமிழக காங்கிரஸ் வாட்ஸ் அப் இல்லாத மொபைல் போலத்தான். எந்த சுவாரஸ்யமும் இருக்காது. கிளைத்தலைவர் போஸ்டிங்கில் துவங்கி மாநில தலைவர் பதவி வரை அத்தனைக்கும் அடிதடிகள், வேட்டி கிழிப்புகள், புகார் கடிதங்கள் என்று எனிடைம் பரபரப்பாய் இருப்பதுதான் இந்த தேசிய இயக்கத்தின் தேஜஸே! 

பாரம்பரியமாக காங்கிரஸில் கோலோச்சிய நபர்கள், அக்கட்சியின் தலைமையில் இருந்தாலுமே புகார் மடல்களை டெல்லிக்கு அனுப்பி, பதவியை காவு வாங்குவதுதான் சக கோஷ்டி தலைவர்களின் ஸ்டைல். இந்நிலையில், அ.தி.மு.க., தனிக்கட்சி, பி.ஜே.பி. என்று ஒரு வலம் வந்துவிட்டு பின் காங்கிரஸில் ஐக்கியமான திருநாவுக்கரசரை அக்கட்சியின் மாநில தலைவராக அமர வைத்தால் ச்சும்மா இருப்பார்களா  பிற கோஷ்டியினர்? 

கடந்த சில மாதங்களாகவே ‘திருநாவுக்கரசரின் பதவி பறி போகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிதாய் நியமிக்கப்பட போவது யார்?’ என்று ஒரு பரபரப்பு அடிக்கடி ஓடிக் கொண்டே இருக்கிறது. இதுவரையில் இந்த தகவல்களை சாதாரண வார்த்தைகளால் மறுத்து வந்த திருநாவுக்கரசர், இப்போது தடாலடியாய் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் இப்படி...

“வாழ்த்துக்கள்! முயற்சி பண்ணி என்னை  பதவியிலிருந்து யாராவதுதான் இறக்கட்டுமே, முடிஞ்சால் அதை செய்யட்டுமேன்னுதான் நானும் சொல்றேன்.” என்று சவால் விட்டிருப்பவர், “எனக்கும் குஷ்புவுக்கு என்னதான் பிரச்னைன்னா...கட்சின்னா ஒரு ஒழுக்கம்  இருக்கணும், கட்டுப்பாடு வேணும். கட்டுப்பாடே இல்லாமல் மற்ற கட்சியில இப்படி தலைமையை பற்றி பேச முடியுமா?” என்றும் தடாலடியாய் அவரை தாளித்திருக்கிறார். 

இத்தோடு விடாமல், “நிச்சயம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும். அதை திருநாவுக்கரசர்தான் அமைப்பாரா?ன்னு கேட்டால் ஆமா, அவரே அமைப்பார்ன்னு எடுத்துக்குங்க. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியுமே முதலமைச்சர் ஆகுறப்ப இந்த நாட்டுல மற்றவங்க முதல்வராகக் கூடாதா?” என்று தெறிக்க விட்டிருக்கிறார். 

‘நான் காமராஜர் ஆட்சி அமைப்பேன்’ என்று அரசர் கூறியுள்ளதைத்தான் எரிச்சலாக பார்க்கின்றனர் தி.மு.க.வினர். ஏற்கனவே ஸ்டாலினுக்கும், அவருக்கும் பிரச்னை இருக்கும் நிலையிலும், கமல் தினகரன் போன்றோருடன் கூட்டணி வைக்க அரசர் முயல்கிறார் எனும் குற்றச்சாட்டு உள்ள நிலையிலும், அவர் இப்படி பேசியிருப்பது தி.மு.க.வினரை எரிச்சல் படுத்தியுள்ளது. ‘தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரைக்கும் முதல்வர்னா அது ஸ்டாலின் தான். வேற கனவுல இருக்கிறவங்க, தாராளமா வெளியில போயிடுங்க இப்பவே!’ என்று வெளிப்படையாகவே பொங்க துவங்கிவிட்டனர்.