காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

மக்களவைத் தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. இதனிடையே 3-வது அணியை அமைக்க புது வியூகம் அமைக்க தெலுங்கானா முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார்.

இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து மு.க.ஸ்டாலினை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் திட்டமிட்டிருந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை. 

இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை சுமார் 30 நிமிடங்களாக நீடித்து வருகிறது. ராகுல்காந்திதான் பிரதமர் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் முந்திக் கொண்டு சொன்னவர் மு.க.ஸ்டாலின், அப்படி இருக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.