தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,585. மே மாதம் நான்காம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி கொண்டிருந்தது. அதிகபட்சமாக 12ம் தேதி 798 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை தினமும் சீராக அதிகரிக்கப்பட்டு, சராசரியாக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

மே 14ம் தேதியிலிருந்து நேற்று வரை 3 நாட்களாக மற்ற மாவட்டங்களில் பாதிப்பும் குறைவாக உள்ளது. நேற்று 8270 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. பாதிப்பை குறைத்துக்காட்டுவதற்காகவே, தமிழக அரசு பரிசோதனைகளை குறைத்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காண்ட்ராக்ட்டுகளில் போலிக் கணக்குகள் எழுதுவதைப் போல, கரோனாவிலும் பொய்க்கணக்கு எழுதி பொழுதுபோக்கி, அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றாதீர்கள்; வரலாற்றுப் பழியை வாங்கிச் சுமக்காதீர்கள்.

'பூனை கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போகுமோ?' - என்றொரு சொலவடை உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது..

கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த் தொற்று குறைந்து வருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் மே 7-ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய (16.5.2020) தகவலின்படி, 8,270 எனக் குறைந்துள்ளது. பரிசோதனை செய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைத்துள்ளது. அதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் காட்டுகிறார்கள்.

பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், நோய்த் தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர; பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வது, விபரீதத்தையே விளைவிக்கும். சாதனை அல்ல, வேதனையே.

சென்னை மாநகரத்திலேயே முறையான நடவடிக்கைகளின் மூலம், கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் கைபிசைந்து நிற்கும் அதிமுக அரசு, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைச் செயற்கையாகக் குறைத்துக் காட்டுவதற்காக, பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, நாடகமாடி வருவதைப் போன்ற மக்கள் துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

கரோனா பரிசோதனைக்கான கருவிகளை வாங்கியதிலேயே ஊழல் செய்தது ஆளும் அதிமுக அரசு. இவர்களால் நோயையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கோயம்பேடு சந்தை மூலம் கரோனா பரவலை அதிகப்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்த அதிமுக அரசு, இப்போது டாஸ்மாக் கடைகளின் மூலமாக அந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கி உள்ளது.

கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி, முறைப்படுத்த முன்யோசனையற்ற இந்த அரசு, இப்போது அதே காரியத்தை டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அக்கறையுடன் செய்து வருகிறது.

கரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சம் சிறிதும் குறையாத ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்கு என்று பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் ‘வாட்ஸ் அப்'-இல் அனுப்பி வைக்கும் வீடியோ பதிவுகளைப் பார்த்தப் பிறகும் முதல்வருக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காக, மற்ற அனைத்துக் கடைகளையும் திறந்துவிட்டார்கள். இதோ கரோனாவே இல்லை என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் நாள்தோறும் செய்யப்பட்டு வந்த பரிசோதனைகளையும் குறைத்துவிட்டார்கள்.

பரிசோதனைகளை அதிகமாக நடத்தியதால்தான் தொற்று உறுதியானவர் எண்ணிக்கையும் அதிகமாகத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாகப் பரிசோதனையைக் குறைத்து, தொற்று உறுதியானவர் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவர் குழுவுடன் கடந்த 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகள் குறித்து ஆராயவும், சர்வதேச அளவில் நிலவும் தடுப்பு முறைகளைக் கண்காணித்து அரசுக்குச் சொல்லவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

19 மருத்துவர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் டாக்டர் பிரதீப் கவுர், டாக்டர் குகநாதன் ஆகிய இருவர் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார்கள். அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை முதல்வரோ, அமைச்சரோ, அதிகாரிகளோ ஊன்றிக் கவனித்தார்களா என்பதே தெரியவில்லை.

”தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையைக் குறைக்கவே கூடாது. ஆனால் கூட்டலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதிகச் சோதனைகளால்தான் தொற்றுப் பரவலைக் கண்டறியமுடியும். தொற்று அதிகமாக இருப்பதினால் பயப்படக்கூடாது. ஆனால் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதைக் கவனித்து அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும்.

கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைச் சீக்கிரமாகக் கண்டறிந்துவிட்டால் இறப்பைத் தடுத்துவிடலாம். சில நேரங்களில் தொற்று அதிக அளவில் அலையாக எழும்; சில நேரங்களில் குறைவாக எழும். அதிகம் பரவும் நேரங்களில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பரவாமல் கட்டுப்படுத்திவிடலாம்" என்று அந்த நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அரசுக்குச் சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக அவர்கள் சொன்னதற்குப் பிறகும், பரிசோதனைகளை அரசாங்கம் குறைக்கிறது என்றால் இந்த நிபுணர் குழு எதற்காக? கண்துடைப்பு நாடகத்தை அனைவருக்கும் காட்டுவதற்குத் தானே? மக்களின் உயிரோடு இப்படியா பொறுப்பற்று விளையாடுவது?

மரபணு மாற்றத்துக்குட்படும் கரோனா வைரஸ் புதிய வடிவில் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என்றும், கனமழை காரணமாகவும் நோய் பரவும் விகிதம் கூடும் என்றும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையும் மீறி பரிசோதனைகளைக் குறைப்பது எவ்வளவு அபத்தமானது; ஆபத்தானது என்பதைத் தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இப்பரிசோதனை செய்வதற்கான பிசிஆர் உபகரணங்கள் போதுமான அளவு இல்லையா? துரித பரிசோதனைக் கருவிகளான ரேபிட் கிட்டுகள் இல்லையா? அல்லது கருவிகள் அனைத்தும் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கெடுபிடி செய்துகொண்டு இருக்கிறார்களா?

பரிசோதனைகள் செய்யாமல் கரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. விளக்கைப் பிடித்துக்கொண்டு ஆழமான கிணற்றில் இறங்குவதைப் போன்றது. ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி வெளியிடுங்கள். அதன்மூலம் நோய்ப் பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள்.

காண்ட்ராக்ட்டுகளில் போலிக் கணக்குகள் எழுதுவதைப் போல, கரோனாவிலும் பொய்க்கணக்கு எழுதி பொழுது போக்காதீர்கள்; அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றாதீர்கள்; வரலாற்றுப் பழியை வாங்கிச் சுமக்காதீர்கள் என்று தமிழக அரசை எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.