Asianet News TamilAsianet News Tamil

தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடும் அமைச்சர் சி.வி.சண்முகம்... அதிமுக மானத்தை வாங்கிய மு.க.ஸ்டாலின்..!

எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

mk stalin attack speech minister cv shanmugam
Author
Tamil Nadu, First Published Dec 14, 2019, 12:46 PM IST

உச்சநீதிமன்றம் தீர்ப்பு தி.மு.க.வுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார் என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

mk stalin attack speech minister cv shanmugam

அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே, தரை தவழ்ந்து, கால் தடவி, ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, திமுக மீது பழியைச் சுமத்தினர். ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், திமுக என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி - தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் நம் கழகம். அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை தி.மு.க. ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

mk stalin attack speech minister cv shanmugam

ஜனநாயகத்தின் உயிரோட்டம் அதன் ஆணிவேர்களான ஊராட்சி மன்றங்கள்வரை நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இயக்கம் திமுக என்பதால்தான்; உள்ளாட்சித் தேர்தலை சட்ட நெறிமுறைகளின்படி நடத்துவதிலும், அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குவதிலும், ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவர். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் அது 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், செல்வி. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், தற்போதைய அடிமை அரசாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் சுணக்கமும், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகளுமே வெளிப்பட்டு வருகின்றன.

mk stalin attack speech minister cv shanmugam

மாநிலத் தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிள்ளையாக வைத்துக்கொண்டு, அடிமை அ.தி.மு.க. அரசு நடத்துகிற ஜனநாயகப் படுகொலைகளை நீதிமன்றங்களே பல முறை தட்டிக் கேட்டிருக்கின்றன. அதனால்தான், 8-12-2019 அன்று நடைபெற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதனைத் தோலுரித்துக் காட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாடியது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கம் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கிறது.

“தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அ.தி.மு.க. அரசிடம் 'சரணாகதி' செய்து விட்டு - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக - உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணிவகுக்க வைத்து - மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருக்கிறது” எனக் கண்டனத்தைப் பதிவு செய்த அந்தத் தீர்மானத்தில், கழகம் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கான காரணங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்ட முறையற்ற தேர்தல் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி; சட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே; சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து 31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழகத் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த முன்வரவில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. அப்போது, 2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை முடிந்து விட்டது. மேலும் பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தது. இறுதியாக 18.11.2019 அன்று “டிசம்பர் 13-ம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்சநீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குளறுபடிகளைச் சரிசெய்யாமல், அதே தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த நிலையில்தான், திமுக மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்த வழக்கில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏதோ தி.மு.க.,வுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார். கடந்த மூன்றாண்டுகாலமாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மரண அடி வாங்கி, மாநிலத்தின் மானத்தை வாங்கியிருப்பது அ.தி.மு.க ஆட்சிதானேதவிர, திமுக ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்திருக்கிறது.

mk stalin attack speech minister cv shanmugam

அ.தி.மு.க. அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊராட்சிகள் எத்தகைய அவலட்சணத்தில் இருக்கின்றன என்பது ஊரறிந்த - நாடறிந்த - ஏடறிந்த ரகசியம்தான். திமுக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும், தி.மு.க. மீது அவர்களுக்கு இருக்கிற கெட்டியான பற்றுதலும் மறக்க முடியாதது. தேர்தல் களத்திலும் அதுவே நிச்சயம் வெளிப்படும்.

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அ.தி.மு.க. அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அ.தி.மு.க. அடையப்போவது தோல்விதான்; தோல்வி தவிர வேறல்ல. மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும்.

mk stalin attack speech minister cv shanmugam

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும். சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios