Asianet News TamilAsianet News Tamil

கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித் தாருங்கள்... அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்க; நம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் அதிமுக அரசுக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

MK Stalin appeal to all panchayat leaders
Author
Tamil Nadu, First Published Sep 30, 2020, 2:57 PM IST

வேளாண் துறையைக் காப்பாற்ற மத்திய அரசின்  3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து அக்டோபர் 2ம் தேதி கிராம சபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- உணவுப் பொருட்களான வேளாண் விளைபொருட்களை வரம்பின்றிப் பதுக்கி வைக்க அனுமதித்திருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020, மற்றும் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையை அங்கீகரிக்க மறுக்கும், விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020 ஆகியவற்றை விவசாயிகளும், வெகுமக்களும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

MK Stalin appeal to all panchayat leaders

இந்த வேளாண் விரோதச் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்து, ஆதரித்ததோடு மட்டுமின்றி, அச்சட்டம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராகப் பேசி வருகிறது. தமிழகத்தில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும், விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தொடர் போராட்டம் நடத்தி, அவர்கள் மீதெல்லாம் கொத்துக் கொத்தாக வழக்குகளைப் பதிவு செய்து, வன்மத்துடன் நடந்து வருகிறது அதிமுக அரசு.

MK Stalin appeal to all panchayat leaders

வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் விரோதமான அதிமுக மற்றும் பாஜக அரசுகள், இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்து ஏழை, எளிய நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக, தொன்றுதொட்டு இருந்து வரும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளைச் சீர்குலைத்து; அனைவரையும் பிரச்சினைகளுக்குள் தள்ளத் திட்டமிட்டிருப்பது, இவர்களின் இச்சட்டங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுப் பிரச்சாரத்தில் எதிரொலிக்கிறது. இந்தச் சூழலில், நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்க; நம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் அதிமுக அரசுக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

ஆகவே, காந்தி பிறந்த நாளான, வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்து, அதிமுக ஆதரித்துள்ள மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராம சபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

MK Stalin appeal to all panchayat leaders

விவசாயிகளின் நலனையும், நம் வேளாண் நலனையும் மனதில் வைத்து, இன்றைக்கும் கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையைக் காப்பாற்ற இந்தக் கண்டனத் தீர்மானத்தை, கட்சி வித்தியாசம் பாராமல், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிறைவேற்றித் தர வேண்டும்; தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை; அதிமுக அரசு, சுயநலக் காரணங்களுக்காக காட்டாத எதிர்ப்பினை மத்திய பாஜக அரசுக்குத் தெளிவுபடத் தெரிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios