சி.சி.டி.வி.யால் எத்தனையோ பேரின் மானம் கப்பலேறி இருக்கிறது. ஆனால் தி.மு.க. அளவுக்கு எந்த அரசியல் கட்சியும் இந்த கேமெராவால் கேவலப்பட்டதே கிடையாது! என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. 

சென்னையில் பிரியாணி கடை ஒன்றில் தி.மு.க. புள்ளி ஒருவர் அராஜகம் செய்து, தாண்டவம் ஆடியது சி.சி.டி.வி. பதிவு வாயிலாக வெளிப்பட்டது. கருணாநிதி இறந்த துக்க நிலையிலும், ஸ்டாலின் அந்த ஹோட்டலுக்கு சென்று வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து சில மாவட்டங்களில் தி.மு.க.வினரின் கூத்துக்கள் இதே போல் சி.சி.டி.வி. வழியாக வெளியாகின. 

ஆனால் அதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல் இன்று வெளியாகியிருக்கும் சி.சி.டி.வி. பதிவொன்று தி.மு.க.வின் மரியாதையை மானபங்கப்படுத்தி இருக்கிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. புள்ளி செல்வகுமார். இவர் மாஜி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர். இவர் பியூட்டி பார்லர் ஒன்றில் ஒரு பெண்ணை மிதி மிதியென மிதித்தும், தலையை பிடித்திழுத்து கீழே தள்ளியும், விழுந்து கிடப்பவரை மீண்டும் உதைத்தும் ருத்ரதாண்டவம் ஆடும் சி.டி.டி.வி. பதிவை தனியார் சேனல் ஒன்று வெளியிட்டது. 

என்னதான் பிரச்னை? என்று விசாரித்தபோது “மிதிபட்ட பெண்ணின் பெயர் சத்தியா. செல்வக்குமார் சுமார் இருபது லட்சம் ரூபாயைஅவரிடம் கொடுத்திருந்தாராம். இந்த கொடுக்கல், வாங்கலில் பிரச்னையாகி இருக்கிறது.

பணத்தைப் பற்றி கேட்கச் சென்ற இடத்தில் அந்தப் பெண் செல்வக்குமாரிடம் கடும் வார்த்தை தகராறில் ஈடுபட்டாராம். இதைத்தொடர்ந்தே செல்வக்குமார் அந்தப் பெண்ணை அடித்து, மிதித்து தள்ளி அட்ராசிட்டி செய்திருக்கிறார்! என்கிறார்கள். 

இந்த சம்பவம் நான்கு மாதங்களுக்கு முன்பே நடந்துவிட்டதாம். பெரம்பலூர் டவுன் போலீஸில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதைத்தொடர்ந்தே புதிய தலைமுறை சேனலுக்கு அதை அனுப்பியதோடு, வாட்ஸ் அப்பிலும் வெளியிட்டாராம் சத்தியா.” என்கிறார்கள். 

இன்னும் சிலரோ “பண விஷயத்தில் அந்தப் பெண் கொஞ்சம் கேம் ஆடிவிட்டார். செல்வக்குமார் கேட்கப்போன இடத்தில் வாய்த்துடுக்காக ரொம்பவே பேசிவிட்டார். அதனாலேயே பொறுமை இழந்து ரொம்பவே ஆடிவிட்டார். ஏதோ ஒரு  கோபத்தில் மிதித்ததோடு விடாமல் பொறுமையா உட்கார்ந்து, நிதானித்து அடிக்கடி எழுந்து போய் உதைத்து தள்ளியிருக்கிறார்.

எப்படி இருந்தாலும் இது மிக மோசமான கிரிமினல் செயல். பொம்பளைன்னும் பாராமல் எட்டியெட்டி உதைக்கிறதும், கீழே விழுந்து கிடக்கிற சத்தியாவை கண்ட இடத்திலும் மிதிக்கிறதும் குரூரமான செயல். ஜீரணிக்க முடியாத இந்த காட்சிகள் தி.மு.க.வினரை ஒட்டுமொத்தமாக அடாவடி நபர்களாகவே சித்தரிக்குது. ” என்கிறார்கள். 

இந்நிலையில் சேனலில் இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் செல்வக்குமார் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் உத்தரவில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.