MK Stalin Activities look Like Vijayakanth

சினிமாவில்தான் இது பார்ட் 2 காலமென்றால், அரசியலிலும் இது சீக்வெல் காலம்தான் போல. அதனால்தான் தனது ‘நமக்கு நாமே’ சீசன் -2 வை அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் ஸ்டாலின். ந.நா சீசன் -1 செமத்தியாக கைகொடுத்த தைரியத்தில்தான் அடுத்த சீசனை துவக்குகிறார் ஸ்டாலின் ஆனால் அவரது மாவட்ட செயலாளர்கள்தான் மண்டை காய்ந்து கிடக்கிறார்கள்.
ஏன்?

கடந்த சட்டமன்ற தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரவில்லை என்றாலும் அசுரபலத்துடன் எதிர்கட்சி நாற்காலியில் ஸ்டாலின் அமர்ந்தார். இதற்கு பெருமளவில் கைகொடுத்தது தமிழகம் முழுக்க அவர் சென்ற ‘நமக்கு நாமே’ நடைபயணம்தான். ஸ்டாலினை ஒரு கார்ப்பரேட் அரசியல்வாதி போலவும் அடையாளம் காட்டியதோடு இளம் வாக்காளர்கள் மத்தியில் ஏகபோகமாக கொண்டு போய் சேர்த்தது. ஜெயலலிதா எனும் சிங்கம் ஆட்சி அரியணையில் இருந்தபோதே ஸ்டாலினின் இந்த நடைபயணம் பெரு வெற்றி பெற்றது என்றால் தற்போது அ.தி.மு.க. அந்தலிசிந்தலியாகி கிடக்கையில் மீண்டும் நடந்தால் ‘நமோ’வுக்கு நிகராக அதிரிபுதிரி ஹிட்டடிக்கலாம் என்று ஸ்டாலின் எண்ணுகிறார். 

நமக்கு நாமே சீசன் -2 வை ஸ்டாலின் தான் செம உற்சாகமாக துவக்குகிறாரே தவிர அவரது கட்சி நிர்வாகிகளென்னவோ இந்த ப்ராஜெக்ட் அறிவிப்பால் களையிழந்துதான் கிடக்கிறார்களாம். காரணம், கடந்த முறை தேர்தலில் ஜெயிக்கும் வெறியில் ஸ்டாலின் நமக்கு நாமே நடந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான செலவில் கணிசமான பங்கை தலைமை கழகம் ஏற்றதாம்.

ஆனால் இந்த முறை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எந்த தேர்தலும் இல்லை. ஆர்.கே.நகர் இடை தேர்தலுக்கு கூட தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஸ்டாலினின் இந்த மெகா ப்ராஜெக்ட் அறிவிப்பாகி இருப்பதில் மண்டை காய்ந்துவிட்டார்கள் மாவட்ட செயலாளர்கள். 

தி.மு.க. மா.செ.க்களின் மன வருத்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் அரசியல் விமர்சகர்கள் “ஸ்டாலினின் நடைபயணம் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி தரும் என்பதில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு எந்த டவுட்டுமில்லை. ஆனால் ஆட்சி அரியணையை விட்டு அகன்று கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாகிவிட்டது. நாடாளுமன்றம், உள்ளாட்சி என மற்ற இரண்டு தேர்தல்களிலும் கட்சி சொதப்பியே இருந்தது. ஆக அரசு பதவிகளிலிருந்து வெகு தொலைவில் நெடுங்காலமாய் இருப்பதால் காசு கையில் பெருமளவில் புழங்குவதில்லை என்று புழுங்குகிறார்கள். 

ஆளுங்கட்சியாக இருந்தால் அடித்துப்பிடித்து ஏதாவது செய்யலாம் ஆனால் எதிர்கட்சியாக இருந்து கொண்டு என்னத்தை செய்துவிட முடியுமென்பதே இவர்களின் விசனம். எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நபர்கள் தி.மு.க. மாவட்ட செயலாளர்களாவது தப்பித்துக் கொள்வார்களா? என்று கேட்டால் அவர்களும் அழுதுதான் வடிகிறார்கள். ஜெ., மரணத்தால் நடந்த குழப்பத்தால் வளர்ச்சிப் பணிகள் எதுவும் பெரிதாக நடக்கவுமில்லை, கமிஷன் வந்து சேரவுமில்லை என்று புலம்புகிறார்கள். 

எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும் தங்களால் ஏரியாவுக்குள் பெரிதாக வசூலும் செய்ய முடியவில்லை என்றும் நோகிறார்கள். மா.செ.க்களுக்கெல்லாம் சொந்தமாய் பிஸ்னஸ் இருந்தாலும் கூட அதை கட்சிக்காக பெரிய அளவில் இறக்கிவிட மனதில்லை. காரணம் உட்கட்சி தேர்தல் செலவு, உள்ளாட்சி நாடாளுமன்ற சட்டமன்ற என பல தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்பதை நினைத்து கிறங்குகிறார்கள். கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகளும் நிதியளிப்பில் தோள் கொடுக்க தயாராயில்லை என்பதே இவர்களின் வருத்தம். 

ஆக ஸ்டாலினின் நடைபயணத்துக்காக கட்சியிலிருந்து பெரிதளவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கினாலே சீரும் சிறப்புமாக அவரை வரவேற்று இந்த சீசன் 2 வை வெற்றி பெற வைக்க முடியும் என்கிறார்கள். 
இல்லையென்றால் நிர்வாகிகளிடம் நிதிவசதியே இல்லாத காரணத்தால் தே.மு.தி.க. திவாலாகி கொண்டிருக்கும் நிலையில் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை விஜயகாந்த் நியமிப்பதும், அவர்களோ ‘கேப்டன் என் கையில காசில்லை. எனக்கு பதவியே வேண்டாம்.’ என்று ஓடுவதுமாக இருக்கும் நிலை தி.மு.க.விலும் உருவாகிவிடும் என்று புலம்பிக் கொட்டுகிறார்கள். 

தங்கள் தளபதி ஒரு சின்ன கேப்டனாக மாறிவிட கூடாது என்றும் நொந்து நூடுல்ஸாகிறார்கள்.” என்று முடித்தனர். 

செயல்தலைவருக்கு இந்த சேதி தெரியுமா?!