சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது மு.க. அழகிரியுடன் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவும் கை கோர்த்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு பின் தாம் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்த்தார் மு.க. அழகிரி. ஆனால் அழகிரியை அனுமதிக்கவே கூடாது என்பதில் ஸ்டாலின் குடும்பம் திட்டவட்டமாக இருந்தது.

இதனால் தமது பலத்தைக் காட்டும் வகையில் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணியை நடத்தினார் அழகிரி. இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டது அழகிரி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து இப்போது அழகிரியுடன் கை கோர்த்திருக்கிறார். அழகிரியின் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் ஒன்றை மு.க. முத்து அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்'  மு.க.முத்து' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.