ஆம்! தினகரனை பிடறியில் அடித்து தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்துக்கு வந்திருக்கிறார் அண்ணன் அழகிரி!...
கட்டுரையின் முதல் வரியை படித்துவிட்டு முழியாய் முழிக்காமல் மேட்டருக்குள் இறங்குங்கள் எல்லாம் விளங்கும். ஜனநாயகத்தின் உச்சபட்ச வடிவமான ‘ஓட்டுக்கு பணம்’ எனும் வழகத்தை தேசத்துக்கே அறிமுகப்படுத்தியவராக அறியப்படுபவர் அழகிரி. 

திருமங்கலம் இடைத்தேர்தலில் இவர் இந்த திருவிழாவை துவக்கி வைக்க, அது ’திருமங்கலம் ஃபார்மூலா’ என்கிற டைட்டிலுடன் தேசமெங்கிலும் பரவி விரவி கிடக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் கூட சில இடங்களில் வாக்குக்கு காசு கொடுக்கப்பட்ட போது ’திருமங்கலம் ஃபார்மூலா’ என்று சிலர் இதை குறிப்பிட்டபோது தமிழகம் அண்ணன் அழகிரியை நினைத்து பேரானந்தப்பட்டது. 

இதற்கிடையில்  ஜெயலலிதா மரணத்துக்கு பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ’இருபது ரூபாய்’ நோட்டு எனும் சிஸ்டத்தை கொண்டு வந்து அதிரிபுதிரியாக தினகரன் ஜெயித்ததாக ஒரு விமர்சனம் வெடித்தது. அதாவது ஓட்டுக்காக கொடுக்கப்படும் சில ஆயிரங்களுக்கான டோக்கனாக இந்த இருபது ரூபாய் வழங்கப்பட்டதாக விரிவுரை சொன்னார்கள். 

அந்தவகையில் அண்ணன் அழகிரியையே தினகரன் தூக்கி சாப்பிட்டுவிட்டதாக குறிப்பிட்டு வெற்றிக் கோப்பையை அ-னாவிடமிருந்து பறித்து தி-னாவிடம் கொடுத்தார்கள். 

இந்த சூழ்நிலையில்தான் கருணாநிதி மரணத்துக்குப் பின் அழகிரி தன் அதிரடியை நிரூபிக்க வந்து சேர்ந்தது ‘அமைதிப் பேரணி’. தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளாத ஸ்டாலினை சுளுக்கெடுப்பதற்காக இந்த பேரணியை அறிவித்தார் அழகிரி. ‘ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்’ என்றும் அறிவித்தார். 

அறிவிச்சது அறிவிச்சாச்சு ஆனா தன் சொந்த கட்சிக்காரர்கள் பெரிதாய் சேர்ற மாதிரி இல்லை. விளைவு, பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது போல் கூலிக்கு ஆள் பிடிக்கும் ஐடியாவில் இறங்கினார்கள். அது ஒர்க் அவுட்டும் ஆனது ஓரளவுக்கு. 

அதாவது அழகிரி நடத்திய ‘அமைதி பேரணி’யை உற்று கவனித்தால் அதில் மாணவர்கள் கணிசமாக இருப்பது புலப்படும். இவர்கள் சென்னையை அடுத்து உள்ள புறநகர் பகுதிகளின் சில கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களாம். தலைக்கு முந்நூறு ரூபாய் தருவதாக பேசி அழைத்து வந்தார்களாம்.

அதேபோல் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்று வெளி மாவட்டங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ‘நாங்க ஒண்ணும் தி.மு.க. காரங்க கிடையாது. பொதுவான ஆளுங்கதான். எந்த கட்சி கூப்பிட்டாலும் போவோம். இன்னைக்கு இந்த மவராசன் ஐநூறு ரூபாய் தர்றேன்னார். அதான் வந்தோம்!’ என்று வெகு இயல்பாக போட்டு உடைத்திருக்கிறார்கள். 

ஆக இப்படித்தான் முந்நூறு, ஐநூறு சில இடங்களில் ஆயிரம் வரைக்கும் தலைக்கு பேசி ஆட்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டார்கள் என்கிறது உளவுத்துறை. இப்படி பெய்டு தொண்டர்களை பின்னால் வைத்துக் கொண்டுதான் ‘ஒன்றரை லட்சம் பேரை தி.மு.க.விலிருந்து நீக்க முடியுமா?’ என்று உதார் விட்டிருக்கிறார் அழகிரி என்கிறார்கள். 

ஆனாலும் கூட ஜஸ்ட் ஒரேயொரு நாளுக்காக கரன்ஸியை அள்ளிவிட்டு கூட்டத்தை  கூட்டி காரியத்தை சாதித்த வகையில் தினகரனை பின்னுக்கு தள்ளிவிட்டு ரேட்டிங்கில் அழகிரி மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதுதான் வரலாறு!