அரசியல் கட்சியை தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.  ரஜினிகாந்த் அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக
ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உருவாகியுள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் எடுத்திருக்கிறார்.

நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேன்னு.. யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரைக்டா வருவேன்” என்று சினிமாவில் வசனம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும்
ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வருகை அரசியல் களத்தில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கலங்கித்தான் போய் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது அரசியல் குறித்து தனது கருத்துக்களையும் கூறி வருகிறார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம்
செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. கடந்த 10 ஆம் தேதி அன்று ஆன்மீக பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேசி வந்தார்.

அரசியல் கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்திருக்கும் ரஜினிகாந்த்தை, பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரி, ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தை, மு.க.அழகிரி சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக மட்டும் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கிறது.