முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, சென்னையில் முகாமிட்டு புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதனை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என தெரிகிறது. சென்னை அறிவாலயத்தில், நேற்று மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, 'அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'கட்சி தலைமை முடிவு செய்யும்' என்றார் நேரு. இந்நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து, சென்னைக்கு காரில் வந்தடைந்தார். ஒரு வாரம் சென்னையில் தங்குகிறார். இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவிக்கும் போது  தி.மு.க.,வில் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. அழைப்புக்காக காத்திருக்கிறோம். தி.மு.க.,வில் தன்னை சேர்க்கவில்லை என்ற, இறுதியான முடிவு தெரிந்து விட்டால், த.க.தி.மு.க எனும்  புதிய கட்சியை, அழகிரி துவக்கி விடுவார். கட்சியை பதிவு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவே, தற்போது, சென்னையில் தங்கியுள்ளார். தேர்தலில், ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஜினியுடன் மு.க.அழகிரி, தொலைபேசி வழியாக, அடிக்கடி பேசி வருகிறார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தென் மாவட்டங்களில், 20 தொகுதிகளில் வெற்றி பெற, வியூகம் அமைத்துள்ளோம். நாங்கள் போட்டியிட்டால், குறைந்தபட்சம், தமிழகம் முழுதும், 5 சதவீத ஓட்டுக்களை பிரிக்க வாய்ப்புள்ளது. நாங்கள் ஓட்டுக்களை பிரித்தால், தி.மு.க., வெற்றி பாதித்து, ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.