பண பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் உள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம், கிழவளவு பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி உள்ளிட்ட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.257 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மொத்தம் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது.