திமுக தலைமை தேர்தலுக்குத் தயாராகி பல மாதங்களாகி விட்டது. இப்போது திமுகவின் குறி பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான். அதற்கான மறைமுகப்பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. அப்படி வந்தால் காங்கிரஸூக்கும், பாமகவிற்கும் சம அளவில் தொகுதி பங்கீடு தர ஆலோசித்து வருகின்றனர். 

திமுக இம்முறை அதிகளவில் போட்டியிடும் வகையில் 180 தொகுதிகளில் போட்டியிடத் தயாராகி வருகிறது. மீதமுள்ள 54 தொகுதிகளை சம அளவில் பிரித்து பாமகவிற்கும், காங்கிரஸிற்கும் வழங்கினால் கூட்டணிக்குள் ஈகோ பிரச்னை வராது என நம்புகிறார்கள். ஆனால், கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகள் வந்தால் திமுக போட்டியிடும் 180 தொகுதிகளிலேயே உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தவிர தென் மண்டலத்தில் அழகிரியால் பிரச்னைகள் ஏற்படாத வகையில் அவரை சமாதானப்படுத்தும் பேச்சுக்களும் தொடர்கிறது.

அவர் ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கோ அல்லது பிஜேபிக்கோ சென்று விடக் கூடாதென்பதில் கவனமாக இருக்கிறது. மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரித்தலும் முடியும் தருவாயில் உள்ளது. வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியென்பதில் அக்கறையாக இருக்கிறோம். இழந்து விட்ட ஆட்சியை மீண்டும் பிடித்தே தீருவது என்பதில் திமுக முழு மூச்சாக இருந்து வருகிறது.