மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவாக முடிவை தெரிவிக்குமாறு அழகிரி கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களம்புக திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அழகிரியால் திமுகவில் பதவி பெற்றவர்கள், உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அரசியல் துறவரம் பெற்ற நபர் போல் அழகிரி ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று அத்தி பூத்தாற்போல் அரசியல் பேசி வந்தார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அழகிரியை பாஜக தரப்பு அணுகியது. ஆனால் அழகிரி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மறுபடியும் அழகிரியை சுற்றி அரசியல் கணக்குகள் ஆரம்பித்துள்ளனர். மு.க.அழகிரி நடிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பவர். எனவே ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் இணையவே அழகிரி காத்திருப்பதாக தகவல் வெளியாகின. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் அழகிரிக்கு அந்த கட்சியில் முக்கிய பொறுப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டாத நிலையில் பாஜக தரப்பு மறுபடியும் அழகிரியை அணுகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொடைக்கானல் வைத்து பாஜக முக்கிய புள்ளி ஒருவர் அழகிரியை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவிற்கு வந்தால் மீண்டும் மத்திய அமைச்சர் ஆக்குவதாக அழகிரிக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறுபடியும் தனது அரசியல் நடவடிக்கை குறித்து அழகிரி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அழகிரி பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சராகிவிட்டால் திமுகவிற்கு நெருக்கடி ஏற்படும் என்று அக்கட்சி தலைமை யோசித்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்காக அழகிரி பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியும் திமுகவிற்கு ஏற்படும். அதோடு மட்டும் அல்லாமல் திமுக உயர்மட்ட நிர்வாகிகள் தொடங்கி வேட்பாளர்கள் வரை அனைவர் குறித்தும் அடி முதல் நாதம் வரை அழகிரி அறிந்தவர். எனவே திமுகவின் தேர்தல் வியூகங்கள் பாஜகவிற்கு அப்படியே கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டே அழகிரியை திமுக தலைமை சார்பில் முக்கிய நபர் ஒருவர் அணுகியதாக சொல்கிறார்கள். பாஜகவில் இணைய வேண்டாம் மறுபடியும் திமுகவில் சேர்த்துக் கொள்கிறோம் என்று அழகிரியிடம் திமுக தலைமை சார்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்தே கடந்த வாரம் நடைபெற்ற திமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் யாரும் வெளிப்படையாக பேசாத நிலையிலும் தென் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு வேளை அழகிரி மறுபடியும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தென்மாவட்டங்களில் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்  அவசரம் காட்ட வேண்டாம் என்று மட்டும் திமுக தலைமை தற்போதைக்கு முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் மு.க.அழகிரிக்கு எம்பி பதவி என்பதை தாண்டி கட்சியில் எந்த பொறுப்பையும் வழங்க ஸ்டாலின் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் இணைவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் பாஜக தரப்பில் இருந்து அழகிரிக்கான ஆஃபர் அப்படியே உள்ளது. ஓகே சொன்னால் அடுத்த பிளைட்டில் டெல்லி சென்று மோடி, அமித் ஷா, நட்டாவை சந்தித்துவிட்டு வந்துவிடலாம் என்று அழகிரிக்க தூண்டில் போட்டு வைத்துள்ளார் தமிழக பெரும்புள்ளி ஒருவர். இதனால் திமுக தலைமை எடுக்க உள்ள முடிவை வேகமாக எடுத்து தெரிவிக்குமாறு அழகிரி தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்திய திமுக புள்ளியிடம் திட்டவட்டமாக கூறியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.