குவைத்தில் பரிதவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசுஉதவ வேண்டும்  என மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி_MLA வேண்டகோள் விடுத்துள்ளார்.  வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.  உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கும் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களில் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. 

அதற்கு விண்ணப்பித்தோரில் 7340 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்காமல் தெருக்களில் உணவின்றி வாடி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.அவ்வாறு பொது மன்னிப்பு பெற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  தமிழர்கள் உள்ளிட்ட 7340 இந்தியர்களும் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்கும் போதிலும் அவர்கள் எப்போது தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்து இந்திய அரசிடமிருந்தும்,  குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.இத்தகைய சூழலில் இந்தியா திரும்புவதற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடையே  கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. சிறிய அறைகளில் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

ஒரே கழிப்பறையை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவர்களில் எவருக்கேனும் கொரோனா இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.  இந்நிலையில் விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், நமது இந்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் அந்த நல்ல வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.இனியும் தாமதிப்பது மேலும் பாதிப்புகளை உருவாக்கும். எனவே 50 சதவீத கட்டண மானியத்தில்  தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு  உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பிட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.