பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்பு தேர்வாக நடத்த வேண்டும் என மஜக பொதுச் செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  கொரோனா நோய்த்தொற்று காரணமாக  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில்  பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார். 

தற்போது கொரனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத நிலையில்,  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது.இதனால் பதினோராம் வகுப்பில்  தகுதி அடிப்படையில்  மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே ஊரடங்கு நாட்கள் முடிந்த பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வகுப்பு தேர்வுகளாக நடத்தி பள்ளி ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டு மதிப்பெண்களை உடனடியாக வெளியிடும் நடவடிக்கை மேற்கொண்டால் எந்தவித தேக்கமும் இருக்காது. கால தாமதம் இன்றி  பதினோராம் வகுப்பு சேர்க்கையை நடத்த ஏதுவாகவும்  இருக்கும். இதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.  

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11 ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம்  மாணவர்கள்  கொரோனா வைரஸ் அச்சத்தால் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் வைரஸ் பரவல் இருந்து வருவதாலும் 10 வகுப்பு தேர்வ நடத்துவதா இல்லையா..? மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து  தமிழக அரசு ஆராய்ந்து வருவது குறிப்பிடதக்கது .