டெல்லியில் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் ஷாகின் பாக்  தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 69 வது நாளில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் ஹாரூண் ரஷீது,  துணைப் பொதுச் செயலாளர் தைமியா அவர்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர். இங்கே எப்போதும் அந்த போராட்ட களத்தில் சராசரியாக 10 ஆயிரம் பேர் இருந்துக் கொண்டே இருக்கின்றனர். அங்கு அவர்களே சமைக்கிறார்கள். அவர்களே துப்புரவு பணிகளையும் செய்கிறார்கள். அவர்களே போராட்டத்தை ஒழுங்குப் படுத்தி வழி நடத்துகிறார்கள். 

அங்கே காந்தி, நேதாஜி, அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கார், பகத்சிங் உள்ளிட்டோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்து, முஸ்லிம், கிரித்தவ, சீக்கிய மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு நல்லிணக்கம் வலியுறுத்தப்படுகிறது. மேடையில் யாராவது முரண்பட்டு பேசினால் அவர்கள் தடுக்கப்பட்டு தவிர்க்கப்படுகிறார்கள். பல சமூக மக்களும் பங்கேற்பதால்  அது ஒரு தேசிய ஒருமைப்பாட்டு களமாகவும் மாறியுள்ளது.பெண்களே தலைமையேற்று வழி நடத்துகிறார்கள். ஒரு வழக்கறிஞர் குழு அனைத்தையும் பொறுப்புணர்வோடு கண்காணித்து வருகிறது. அதில் உள்ள ஜமால் முஜாஹித் என்பவர் கூறும் போது,   இப்போராட்டத்தை மக்களே தொடங்கியுள்ளார்கள். மக்களே இதை முடித்து வைப்பார்கள் என்றார். 

பிறகு போராட்டக்காரர்களுக்கு   மத்தியில் பேசிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ,நாடு முழுக்க ஷாகின் பாக்குகள் பரவுகின்றன.  நாங்கள் தமிழகத்திலிருந்து வருகிறோம். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் பரவுகிறது.. இதற்கு நீங்கள் தான் முன்னுதாரணம். இது நாட்டின் அடையாளமாக மாறி வருகிறது. நாம் இறையருளால் வெற்றி பெறுவோம் என்று பேசினார். தமிழகத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டதும்  ஆயிரக்கணக்கான மக்கள் கைத்தட்டி வரவேற்றனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹ்மது, நாகை முபாரக் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.