ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கப்படுகிறது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.அர்ச்சுனன் குறி போல், திமுக குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஆளுங்கட்சியிடம் நிறைய பணம் உள்ளது. தங்களை காப்பாற்றி கொள்ள பணத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது. பணத்தை கொடுத்தும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனங்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக எதுவும் செய்யவில்லை. இந்த கோபம் மக்களிடம் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்கள் தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். வெற்றிக்கான சூத்திரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 முறை வெற்றி பெற்றதற்கு சமம். பாஜக ஆட்சியின் அதிகார பலம், அதிமுக ஆட்சியின் பண பலத்தை தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும்.  அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி  தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும். திமுக சார்பில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களை கட்சியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி திமுக ஆட்சி கட்டிலில் அமரவைக்க வேண்டும். இதில் ஒரு இஞ்ச் குறையக்கூடாது. 24 மணி நேரம் உழைத்தால் தான் நமது இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.