எந்த வருமானமும் இல்லாததால் வங்கியிடம் வாங்கிய கடனை செலுத்த காலதாமதமாகி விட்டதாக தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடனை கட்ட முடியாததால் விஜயகாந்தின் வீடு, சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பி வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமறித்த பிரேமலதா, ’’நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பவர்களுக்கு எப்போதுமே சோதனை வரும். அதைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படும். அப்படித்தான் இந்த ஏல அறிவிப்பையும் நாங்கள் பார்க்கிறோம். கல்லூரி விரிவாக்கத்திற்காக அந்தக் கடன் வாங்கப்பட்டது. இப்போது கல்லூரி நல்ல நிலையில் இயங்கவில்லை. அதன் மூலம் வருமானமும் வருவதில்லை. பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே. 

கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியாமல் க‌ஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். வருமானத்திற்கு இப்போது வழியில்லாமல் போய்விட்டது. கேப்டன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். வருமானம் வந்து கொண்டிருந்த கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டு விட்டது. மகன் இப்போதுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். 

அனைத்து தொழில்களும், கல்லூரிகளும், சினிமாத்துறையினரும் கடனில் தான் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். நாங்கள் மட்டுமா கடனில் இருக்கிறோம். இந்தியாவே கடனில் இருக்கிறது. தமிழகமே கடனில் இருக்கிறது. ஜூலை 25 க்குள் இந்த பிரச்னையை முடித்து விடுவோம். கேப்டன் இந்தக் கல்லூரியை ஏழை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பித்தார். சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரி தொடரும். ஓவ்வொரு காலகட்டத்திலும் வங்கிக்கு கடன் தொகையை செலுத்தி வந்தோம். கடன் தொகையை செலுத்த இரண்டு மாதம் அவகாசம் கேட்டோம். ஆனால் வங்கி மறுத்து விட்டது.

செங்கல்பட்டில் உள்ள கல்லூரி அது. ஆகையால், சென்னையில் உள்ள சொத்தை பிணையாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.   நிச்சயமாக இந்த பிரச்னையில் இருந்து மீண்டும் வருவோம். நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிட மாட்டான். கேப்டன் உடல்நலத்துடன் சிறப்பாக இருக்கிறார்’’ என அவர் தெரிவித்தார்.