கஜாவுக்காக திறக்குமா மன்னார்குடி கஜானா?: பாலும் பழமும் சாப்பிட்ட அமைச்சரின் சிலிர்ப்பு.

*    தமிழக காவல்துறையில் வெறும் 5% -க்கும் குறைந்த பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. விரைவில் அதையும் நிரப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்! என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 
(தலீவரே எதுக்குங்க வீண் செலவு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த மாநிலம்!ன்னு விருது வாங்குன நமக்கு இந்த போலீஸெல்லாம் தேவையா?)

*    அரசின் நிதி மக்களை சென்றடையும் வரையில், தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் போல மக்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும்! என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
(கரெக்ட்டு தல, அதேநேரத்துல நிவாரண பொருள் வாங்குன கணக்கை காட்டுறப்ப, நம்ம பெங்களூரு குமாரசாமியாட்டமா இல்லாம, உருப்படியான ஒரு கால்குலேட்டரை வாங்கி அமுக்கிப் பார்க்க சொல்லுங்க.  கூட்டலை பார்த்தால் குப்புன்னு கண்ணீர் வருது.)

*    எஞ்சினியரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிய கோயமுத்தூர் இன்ஸ்பெக்டருக்கு ஐம்பதாயிரம் ரூபாயை அபராதமாக மனித உரிமை ஆணையம் விதித்து தீர்ப்பளித்தது. 
(க்கும்! தகாத வார்த்தைகள் பேசினாங்கன்னு போலீஸ்ட்ட அபராதம் வசூலிச்சா ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா பல கோடிகள் கிடைக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க ஆபீஸர்ஸ்)

*    சோழநாடு சோறுடைத்துன்னு சொல்லுவாங்க. ஆனால் கஜா புயலால் அந்த மக்கள் சாப்பாட்டுக்காக வீதியில் நிற்பது பெரும் வேதனையை தருகிறது! என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 
(யண்ணே உங்க வேதனை தீரும் முன்னே, அப்படியே அந்த மன்னார்குடி அரசகுடும்பத்தின் சார்பா நிவாரண நிதிகளை அள்ளி இறைங்கண்ணே. மன்னார்குடியும் சோழ மண்டலத்துலதானே அண்ணே இருக்குது! நீங்க செய்யலேன்னா ஆரு செய்வாக?)

*    புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய குழுவை மத்திய அரசு உடனடியாக அனுப்புவது, தமிழகத்தின் மீது பிரதமர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது! என்று சிலிர்த்திருக்கிறார் அமைச்சர் ஜெயகுமார். 


(ஆஹா குழுவை அனுப்புனதுக்கே ‘பாலும் பழமும் சாப்பிட்டது போல் இருக்குது’ன்னு சிலிர்க்கிறீங்களேண்ணே, அவங்க அறிக்கையையும் சமர்ப்பிச்சுட்டால், ‘போதும் தெய்வமே இந்த கரிசனமே போதும்’ன்னு கும்பீடு போட்டு குபீர்ன்னு வுழுந்துடுவீங்களோ?)