ministers will join soon says dinakaran
எனக்கு எதிராக பேசும் அதிமுக அமைச்சர்கள், விரைவில் என்னிடம் வந்து சேருவார்கள் என டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரண்டாக செயல்படுகிறது. இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரனும் கைது செய்யப்பட்டனர்.
இரு அணிகளாக செயல்படுவதால், அதிமுகவின் அதிகாரப்பூர்வமாக இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என போட்டியிட்டனர். இதனால், இரு பிரிவினர் இடையே போட்டி ஏற்பட்டு, பின்னர் சமரசம் நிலவியது. இதையடுத்து இரு அணிகளும் இணைவதாக பேசப்பட்டது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா மற்றும் தினகரனை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து நீக்கினால், இணைவோம் என நிபந்தனை விதித்தனர். அதன்படி அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதுபற்றி டிடிவி.தினகரனிடம் கேட்டபோது, இரு அணிகளும் இணைவதாக இருந்தால், தானாவே கட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்தார். ஆனால் சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயரை கட்சியின் அனைத்து குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர் அணியினர் கூறி வந்தனர். இதனால், இரு அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்து வந்தது.
இதற்கிடையில், சுமார் 45 நாட்கள் திகார் சிறையில் இருந்த டிடிவி.தினகரன், ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, இரு அணிகளும் இணையும் என எதிர் பார்த்து கட்சியில் இருந்து விலகுவதாக கூறினேன். ஆனால், அதற்கான எந்த பேச்சு வார்த்தையும், உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை. இனி நானே கட்சியை வழி நடத்துவேன் என கூறினார்.

இந்நிலையில், வரும் ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இதையொட்டி ஜனாதிபதி தேர்தலில், அதிமுக சார்பில் எந்த வேட்பாளருக்கு, ஆதரவு அளிக்கப்படும் என டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, “இதுபற்றி கட்சியின் பொது செயலாளர் சசிகலா முடிவு செய்வார். அதன்படி ஜனாதிபதி தேர்தலில் எங்களது 122 எம்எல்ஏக்களும் கட்டுப்பட்டு வாக்களிப்பார்கள். தற்போது எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் அனைவரும், தங்களின் நிலையை மாற்றி கொண்டு விரைவில் என்னிடம் வந்து சேருவார்கள்” என்றார்.
