ஓ.பி.எஸ், சசிகலா இடையே நடக்கும் போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக அமைச்சர்கள் சிலர் வர உள்ளனர்.
செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குடுப்பதால் வருத்தத்தில் இருக்கும் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் அணி மாற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு பன்னீர் என்று கட்டுக்கோப்பாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சியின் தலையில் கொள்ளி வைத்தது போல் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யபட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இரண்டு நாள் பொறுமை காத்த ஓ.பி.எஸ் திடீரென போர்க்கொடி தூக்க அதிமுக இரண்டாக பிளவு பட்டது.
ஓ.பி.எஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என கூறியவர்களே கொஞ்சம் கொஞ்சமாக ஓ.பி.எஸ் அணிக்கு வரத்துவங்கி உள்ளனர்.
இரண்டு எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி என முதல் நாள் பன்னீருக்கு ஆதரவு அளிக்க, அடுத்த நாள் அது 6 எம்.எல்.ஏக்களாக கூடியது.

மனோஜ் பாண்டியன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என்று பெருகிய ஆதரவின் உச்ச கட்டமாக அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வத்திற்கு அதரவு அளித்தார்.
இதையடுத்து சசிகலா மதுசூதனனை கட்சியில் இருந்து நீக்கி செங்கோட்டையனை அவைத்தலைவராக ஆக்கினார்.
மறுபுறம் இன்று காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. எம்.பிக்கள் இரண்டு பேரும் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ் க்கு நேரில் ஆதரவு தர சசிகலா தரப்பு ஆடிபோய் உள்ளது.

பல அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் அணிமாற தயராக இருக்கின்றனர்.
நேற்று மதுசூதனைனை நீக்கிய அந்த இடத்தில் மூத்த அமைச்சர்களை நியமிக்காமல் ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவு அமைச்சர்களாக இருந்த தங்களுக்கு அவைத்தலைவர் பதவியை வழங்காமல் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த செங்கோட்டையனுக்கு அவைத்தலைவர் பதவியை அளித்தது மற்றும் அனைத்து விஷயங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கபடுவது தமிழகத்தின் மேற்கு மாவட்டதில் வலுவாக உள்ள அமைச்சர் வேலுமணியும் தங்கமணியும் விரும்பவில்லையாம்.

ஆரம்பம் முதலே சின்னம்மா பக்கம் உறுதியாக நிற்கும் தங்களை ஒதுக்கிறார் என்ற வருத்தத்தில் இருக்கிறார்களாம்
ஆகையால் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போதே தாவலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவும் இதுகுறித்து தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இவர்கள் இருவரும் ஓ.பி.எஸ் களத்தை வலுப்படுத்த வரலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இவர்கள் வரும் பட்சத்தில் தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பெருவாரியான எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் அணிக்கு தாவுவது உறுதி.
