ministers sellur raju and manian agreed that jayalalitha regime not continued

தற்போது நடப்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை என்பதை அமைச்சர்களே அவர்களின் பேச்சின் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முதல்வர் பழனிசாமி தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வதாக அமைச்சர்கள் தெரிவித்தாலும், தற்போதைய ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, பழனிசாமி அரசு செயல்பட்டதாகவும் அதனால் பெயரளவில் ஜெயலலிதாவின் ஆட்சி என சொல்கிறார்களே தவிர, தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தினகரனும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் தினகரனின் விமர்சனங்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்களும் பேசிவருகின்றனர். ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத அமைச்சர்கள், அவரது மறைவிற்குப் பிறகு யோசிக்காமல், வாயில் வருவதை எல்லாம் பேசி சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வதாக பேச்சுக்குத்தான் சொல்கிறோம். ஆனால், நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொள்ளும் வகையில் பேசிவருகின்றனர். 

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதுதான் ஆர்.கே.நகரில் அதிமுகவின் படுதோல்விக்குக் காரணம். பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டின்படி இனி செயல்படுவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். பாஜகவுடன் இனிமேல் இணக்கம் கிடையாது என ஜெயலலிதா ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதன்மூலம், ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றவில்லை என்பதை மறைமுகமாக செல்லூர் ராஜூ ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோல, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்த குருமூர்த்தி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில், இதே ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால், குருமூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், குருமூர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பழனிசாமி அரசு, ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தவில்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளது. 

ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாக கூறிவந்த ஆட்சியாளர்கள், தற்போது, இது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என்பதை பறைசாற்றும் வகையில் மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்துவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.