சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விவாதங்களை திமுக அரசு முடக்கப் பார்க்கிறது. திமுக ஆட்சி என்பது ஒரு விளம்பர ஆட்சி. மக்களுக்கு விடியலை தராத ஆட்சி.
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் உதயநிதியை காக்காப் பிடிக்க துதிபாடுவது திமுகவுக்கு ஒரு பின்னடைவுதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்
மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து செல்லூர் ராஜூ மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கட்சிப் பதவிக்கு அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது ஒன்றும் திமுக அல்ல. யாரைத் தேர்ந்தெடுப்பது, பொறுப்புக்கு கொண்டு வருவது போன்ற முடிவை எடுப்பதெல்லாம் கட்சித் தலைமைக்குதான் இருக்கிறது. என்னை எதிர்த்து மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு மற்றவர்கள் போட்டியிட்டது குறித்த நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

விடியல் தராத ஆட்சி
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்த பணிகளை விட்டுவிட்டார்கள். சட்டப்பேரவையில் உதயநிதியை காக்கா பிடிக்க அவரை துதிபாடுவது திமுகவுக்கு ஒரு பின்னடைவுதான். திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விவாதங்களை திமுக அரசு முடக்கப் பார்க்கிறது. திமுக ஆட்சி என்பது ஒரு விளம்பர ஆட்சி. மக்களுக்கு விடியலை தராத ஆட்சி.

அமைச்சர் என்னிடம் உறுதி
மே தினத்தையொட்டி அனைத்து தொழிலாளர்கள் நிரம்பிய மே தினக் கூட்டம் நடைபெற உள்ளது. நலிந்த தொழிலாளர்களாக உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு இக்கூட்டத்தில் நிதி வழங்கப்படும். இது வேறு எந்த இயக்கத்திலும் இல்லை. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியாக நடைபெறவில்லை என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் கூறினேன். விரைவில் நிறைவேற்றப்படும் என்று அவர் என்னிடம் உறுதி அளித்தார்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
