ministers planning to join ops team

சசிகலா அணியில் இருக்கும் 10 அமைச்சர்கள், ஓ.பி.எஸ் அணிக்கு தாவுவதாக எழுந்த தகவலை அடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது.

மேலும், முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் வீட்டில், வருமான வரி சோதனை நடத்தப்படும் என்றும், ஆட்சி கலைக்கப்படும் என தகவல்கள் பரவின.

இதையடுத்து, பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், அந்த தகவல்கள் வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

அதேசமயம், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தால், தங்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படாது என்று கூறப்பட்டதால், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், பன்னீர் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதனால், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அமைச்சர்கள் பலர் பன்னீர் அணிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர்கள் யாரும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரவில்லை.

எனவே, இதுவும், வெறும் வதந்தி என்றே கூறப்படுகிறது. ஆனாலும், வருமானவரி சோதனை மற்றும் இதர வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் சிலர் எந்நேரமும் ஓ.பி.எஸ் அணிக்கு தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, போலீசாரும், மாநில உளவுத்துறையினரும் தங்களது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.