வேட்டி கட்டிய ஜெயலலிதா!’...தன்னை இப்படித்தான் நினைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் கூறவில்லை, அவரது அமைச்சரவை சகாக்களே அப்படித்தான் கூறுகின்றனர் அரண்டு போய். வெளியே வெள்ளந்தி மனிதராய் தெரிந்தாலும் கூட உள்ளுக்கு மிக அழுத்தமான, சாணக்கியத்தனமான, சில நேரங்களில் அசுரத்தனமான அரசியல்வாதியாய் நடந்து கொள்கிறார்! என்பதே அவர்களின் விமர்சனம். 

இப்போது திடுதிப்பென ஒரு சிக்கல் முடிச்சில் சிக்கி, சரசரவென சரியதுவங்குமென அவர் நினைக்கவேயில்லை பாவம்! என்றும் அதே அமைச்சர்கள் விமர்சிக்கிறார்கள். 

காரணம்?...நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின் விளைவுதான்! ஆடிப்போயிருக்கிறது தமிழக அமைச்சரவை வட்டாரம். முதல்வருக்கே இந்த கதியென்றால், தங்களின் நிலையெல்லாம் என்னாகும்? என்று தாறுமாறாக பயந்து கிடக்கிறார்கள். 
கோட்டை பக்கம் விசாரணையை துருவினோம்! கிடைத்த தகவல்கள் அப்படியே அல்வா துண்டுகளாக இங்கே....

”முதல்வர் பதவியில் வந்தமர்ந்த எடப்பாடியாரை துவக்கத்துல சர்வசாதாரணமாகத்தான் நினைச்சோம். ஆனா சசி தலையிலேயே கை வெச்ச அவரோட சாதுர்யத்தையும், தைரியத்தையும் பார்த்த பிறகுதான் அவரோட உள் முகம் புரிஞ்சுது. கொஞ்சம் கொஞ்சமா ஆட்சியிலேயும், கழகத்துலேயும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சார். 

எடப்பாடியார் ஏறி அடிக்க துவங்குகிறார் அப்படிங்கிறதை ஏஸியாநெட் தமிழ்தான் முதல்ல வெளிப்படையா உரிச்சு எழுதுச்சு. ’சந்திரமுகி படத்துல அந்த மாய அறைக்குள்ளே போன ஜோதிகா, சந்திரமுகி மாறியே நின்னா, நடந்தா , அவளாவே மாறினாள்! அப்படிங்கிற மாதிரி, முதல்வரா இருந்த ஜெயலலிதாவின் சேர்ல உட்கார்ந்த எடப்பாடியார், அவரை மாதிரியே ஜோஸியம் சென்டிமெண்ட்  பார்க்கிறார், ஜெயலலிதா மாதிரியே தன்னை நினைக்கிறார், ஜெயலலிதாவாகவே மாறிட்டார்!’ அப்படின்னு எழுதுனது இன்னமும் நினைவிருக்குது. 

கட்சிக்குள்ளே அதிகாரத்தை தக்க வைக்க எடப்பாடியார் செஞ்ச அரசியல் சாதரணமானதில்லை. பன்னீருக்கு டெல்லியிலிருந்த செல்வாக்கை தட்டி தரைமட்டம் பண்ணியது அவர்தான். தினகரனை எடப்பாடியார் மீட் பண்ணியதா சுழன்றடிக்கிற பிரச்னையின் பின்னணியில ஸ்கோர் பண்ணியதும் எடப்பாடியார்தான். இந்த ஆட்சி தொடருமோ தொடராதோ, அடுத்தும் எங்க ஆட்சி வருமோ வராதோ! ஆனால் இந்த நொடி வரைக்கும் கட்சியை தன் கைக்குள்ளே வெச்சிருக்கிறார் மனுஷன். பன்னீரை டம்மியாக்கி தெறிக்க விட்டிருக்கிறார். சமீபத்துல தன்னோட டெல்லி விசிட் மூலமா மத்திய அரசுக்கு நெருக்கமான ஜோனுக்குள் தான் இருப்பதாக காட்டி வந்திருக்கிறார். 

இவ்வளவு இறங்கி அடிக்கிறதாலேதான் அவரை வேட்டி கட்டிய ஜெயலலிதா!ன்னு நாங்க கிசுகிசுத்துக்குவோம். 
அப்பேர்ப்பட்ட எடப்பாடியாருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவு நிச்சயமாகவே ஒரு பெரும் சரிவுதான். 
காரணம்?...இந்த உத்தரவுக்குப் பிறகு கட்சி கலகலத்துப் போயிருக்குது. அம்மாவின் ஆண் உருவமாகவே பார்க்க ஆரம்பிச்ச அவருக்கு, அம்மாவை போலவே நீதிமன்றம் மூலமா சறுக்கல் துவங்கியிருக்குதே. அதுவும் அம்மாவை வீழ்த்திய அதே தி.மு.க. அம்புதான் இவரையும் நெட்டி தள்ளுது வீழ்ச்சி நோக்கி. 

நேற்று தீர்ப்பில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆரம்பம் முதலே எடப்பாடியாருக்கு கதி கலங்கும் வகையில்தான் விளாசி தள்ள துவங்கினார்...

*    இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறாஇ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பு வாதமும் அதே நிலையில்தான் உள்ளது.

*    மாநிலத்தின் முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லப்படும் போது, குற்றச்சாட்டுக்கு எதிராக அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அப்படி செய்யவில்லை. 

*    இந்த செயலே நீதிமன்ற அவமதிப்புதான். லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு! என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள இணை இயக்குநர் மீதே பாலியல் புகார் உள்ளது. இது போன்ற அதிகாரிகளால் எப்படி சரியான விசாரணையை நடத்த முடியும்? ...என்கிற வார்த்தைகளெல்லாம் எடப்பாடியாரை அதிர வைத்திருக்குது. 

அது மட்டுமா “பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடைபிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.” அப்படின்னு நீதிபதி சொன்னது எடப்பாடியாரை அலற வெச்சிருக்குது. 

ஆக அம்மாவை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மற்றும் உடல்நல சரிவை நோக்கி தி.மு.க.வின் வழக்கு தள்ளிட்டே போச்சு. அதே மாதிரி எடப்பாடியாரையும்  இந்த வழக்கு தள்ள துவங்கிடுச்சுன்னு அமைச்சரவை பரபரப்பா பேசுது. 

ஆனால் மின்மினி பூச்சி மாதிரி பளபளத்த தன் அதிகார வாழ்க்கை இப்படி சட்டுன்னு இருட்டை நோக்கி நகர ஆரம்பிக்குமுன்னு எடப்பாடியாரே நினைக்கலை!” என்று முடிக்கின்றனர். 

ஆம்! வேட்டி கட்டிய ஜெயலலிதாவின் இந்த விறுவிறு சரிவு அசாதாரணமானதுதான்.