ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று முன்தினம் வரை 5 கட்டமாக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, நேற்று காலை முதல் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் , துணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அதில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், மாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. ஆனால், இந்த போராட்டம் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. தற்போது 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், எந்த தடங்களும், தடையும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும்.

பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பஸ்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து 1000 பஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தனியார் பஸ்கள் தற்போது, பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்படுகின்றன. இதையே காரணமாக வைத்து, அதிக கட்டணம் வசூலித்தால், தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாளை நடக்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.