அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி நீடிக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மேலும் பல
விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது,

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன், எடப்பாடி அணி இணைவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த இரு அணிகளும் இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மாஃபா. பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணிகள் இணைப்பு குறித்தும், சசிகலா குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர்கள், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஓ.பன்னீர் செல்வம் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அதிமுக இரு அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளனர்.