தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுகவைச் சேர்ந்த தென்னலூர் பழனியப்பன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த 18 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டம், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தென்னலூர் பழனியப்பன் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்.ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை தரக்குறைவாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் அதிமுக நிர்வாகி கருப்பையா என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்னலூர் பழனியப்பன், பொன்.ராமலிங்கம் ஆகியோர் மீது அவதூறாக பேசுதல் 294, 323, 301 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து தென்னலூர் பழனியப்பனையும், பொன்.ராமலிங்கத்தையும் கைது செய்ய தேடினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுகவை சேர்ந்த தென்னலூர் பழனியப்பன். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.