Asianet News TamilAsianet News Tamil

குட்கா விற்பனைக்கு துணைபோன விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்! மு.க.ஸ்டாலின்

Minister Vijayabaskar should resign - M.K.Stalin
Minister Vijayabaskar should resign - M.K.Stalin
Author
First Published Apr 26, 2018, 1:09 PM IST


குட்கா ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தாம் வரவேற்பதாகவும், குட்கா விற்பனைக்கு துணை நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவின்றி போதைப் பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

குட்கா உரிமையாளர்களிடம் இருந்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குட்கா ஊழல் வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தாம் வரவேற்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குட்கா ஊழல் வழக்கு சுதந்திரமாக நடைபெற சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார். குட்கா வழக்கில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது என்றார்.

டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கும் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குட்கா ஊழல் விசாரணை சுதந்திரமாக நடைபெற அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். 

குட்கா ஊழலில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  குட்கா விற்பனை குறித்து ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் பேச முற்பட்டபோது அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எங்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர்.

குட்கா விற்பனைக்கு துணை நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். சந்தேகம் வந்தவுடனேயே பதவி விலகுவதுதான் சரியானது என்றார். குட்கா ஊழலில் முதலமைச்சர் முதற்கொண்டு அனைவருக்கும் மாமுல் சென்றுள்ளது. எனவே முதலமைச்சர் பதவி விலகுவதுதான் அவருக்கு அழகு என்றார்.

ஆசிரியர் போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செல்போனில் பேச முயன்றேன் ஆனால், அவர் பேச மறுத்து விட்டார். 110 விதியின்கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த உறுதியை அமைச்சர் செங்கோட்டையன் காப்பாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios