புதுக்கோட்டையில் உள்ள  ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. புதுக்கோட்டை மன்னரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை. கடந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்ட நிலையில் வரலாற்று சிறப்புமிக்க ராணியார் மகப்பேறு மருத்துமனை மூடப்பட்டது. மூடப்பட்ட மருத்துவமனைகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து போராடினார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை ராணியார் மகப்பேரு மருத்துமனையை மீண்டும் புதிய கல்வெட்டோடு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் வந்த அரசு கார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நிறுத்தி இருந்தனர். 

விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் நல்ல நிலையில் நின்ற அரச மரத்தின் கிளை ஒன்று உடைந்து அமைச்சர் வந்த காரின் மேல் விழுந்து கார் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராணியார் மருத்துவமனையை மூடிய நிலையில் கஜா புயலில் பல மரங்கள் கிளை ஒடிந்தது. ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் நல்ல நிலையில் நின்ற மரங்களையும் வெட்டி கடத்தினார்கள். இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பால் இந்த அரசமரம் தப்பியது. 

ஆனால் நேற்று அமைச்சரின் காரில் அரச மர கிளை விழுந்து கார் கண்ணாடி உடைந்ததால் அந்த இடத்தில் நின்ற முன்பு மரங்களை வெட்டி கடத்திய விஜய் மன்றத்தைச் சேர்ந்த பிரமுகர்.. இந்த மரத்தை நாளை இல்லாமல் செய்துவிடலாம் என்று கூட்டத்திலேயே சொன்னது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில்  அரச மரம் காரில் விழுந்ததால் சகுனம் சரியில்லை என்ற பதற்றமும் அமைச்சர் தரப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.