மத்திய அரசின் ரெய்டு மேளாவில் வகையாய் சிக்கி வதைபட்டுக் கொண்டிருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவரோடு சிக்கிய அமைச்சர்கள் மற்றும் சசிகலா சைடு நபர்கள் கூட இரண்டு மூன்று விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் விஜயபாஸ்கரை பல மாதங்களாக வெச்சு செய்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை.

இந்த நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் கூட தன் துறை சம்பந்தபட்ட விஷயங்களில் அதிரடி நடவடிக்கை எடுப்பதில் தயக்கமே காட்டுவதில்லை விஜயபாஸ்கர். தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த அரசு மருத்துவமனைகளுக்கு விசிட் செல்வது, பெட்ஷீட் முதல் பிரேத பரிசோதனை கூடம் வரை ஆய்வு செய்வது என்று தட்டி எரிவார். இது நல்ல விஷயம்தான் என்றாலும் கூட, ஆய்வின் போது ஏதாவது குற்றம் குறைகள் காணப்பட்டால் ஓவராய் விமர்சிக்கிறார், கண்டிக்கிறார், கோபப்படுகிறார் அமைச்சர், பொது இடத்தில் வைத்து நக்கலாய் பேசிவிடுகிறார். என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்களிடம் பெரும் எரிச்சல் கலந்த குறை ஒன்று ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த சென்றிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்து அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு நடத்தியிருக்கிறார். அப்போது அந்த பிரிவை முறையாக பராமரிக்கவில்லை! என்று தவறுகளை சுட்டிக்காட்டி கோபப்பட்டாராம். ஆனால் அங்கிருந்த ஏ.ஆர்.எம்.ஓ.வான டாக்டர் பொன்முடி செல்வன் என்பவர் ‘இல்லைங்க சார் வசதிகள் எல்லாமே செய்துள்ளோம், பெயிண்ட் அடித்துள்ளோம்.’ என்று பதில் சொன்னாராம்.  

உடனே டென்ஷனான அமைச்சர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வார்டுகள் பராமரிப்பது குறித்த போட்டோக்களை அவரிடம் காட்டி ‘இதுதான் பராமரிப்பு, இதுக்குப் பேர்தான் நிர்வாகம்.’ என கூறியிருக்கிறார். சில ரவுண்ட்ஸ் திட்டுக்களும் விழுந்துள்ளது. அதோடு நில்லாமல், அங்கிருந்த மெடிக்கல் காலேஜ் டைரக்டரிடம் ‘இவரை சென்னைக்கு அனுப்பி, அங்கே வார்டுகள் எப்படி பராமரிக்கப்படுதுன்னு ட்ரெயினிங் எடுக்க வையுங்க.’ என்றாராம். உடனடியாக அதற்கான உத்தரவு ஏ.ஆர்.எம்.ஓ.வுக்கு வழங்கப்பட்ட அவர் டென்ஷனாகி ‘என்ன அமைச்சர் இப்படி அவமானப்படுத்துறார்’ என்று வருந்திவிட்டாராம். 

இந்த தகவல் மாநிலமெங்கும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் சீனியர் டாக்டர்கள், டெக்னீஸியன்கள் தரப்பில் பரவ “எங்கே வந்தாலும் இந்த அமைச்சருக்கு இதே வேலையா போச்சு. மக்களுக்கு நல்லது நடக்குறதுக்காக நம்மை வேலை வாங்குறதோ, குறைகளை சுட்டிக் காட்டுறதோ தப்பில்லை. ஆனால் பொது இடத்தில் தரக்குறைவா பேசி அசிங்கப்படுத்துறது, ஏதோ ஜூனியர்களுக்கு செய்யுறமாதிரி டிரெயினிங் போட்டு காமெடியாக்குறதெல்லாம் என்ன பழக்கம்? விஜயபாஸ்கரின் இந்த போக்கை கண்டிச்சு நாம உடனடியா போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். இல்லேன்னா அடுத்து சஸ்பெண்ட் பண்றது டிஸ்மிஸ் பண்றதுன்னு ஓவரா போயிடுவார். 

இவர் முதல்ல க்ளீன் மனிதரா. வருமான வரித்துறையோட தொடர் விசாரணையில் இருக்கிறார், வாங்கி குவிச்சிருக்கும் சொத்துக்களுக்கு கணக்கு காட்ட முடியாத இவர் எதுக்கு நம்மை அசிங்கப்படுத்துறார்? குட்காவுல இவர் படாத அசிங்கமா? நம்மை திட்ட இவருக்கு என்ன தார்மீக உரிமை  இருக்குது?” என்று கொதித்துள்ளனர். இந்த தகவல் அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குப் போக, “கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வர்றவங்க பணம் இல்லாத மக்கள்தான். அவங்களோட குரலாதான் நான் ஒலிக்கிறேன். இதுக்காக என் மேலே இவங்க கோபப்பட்டாலும், போராட்டம் பண்ணினாலும், என்னை எவ்வளவு அசிங்கமா விமர்சனம் பண்ணினாலும் அதைப் பத்தி எந்த கவலையுமில்லை. இவங்க திட்டத்திட்ட எனக்கு மக்கள் மத்தியில் மரியாதையே.” என்றாராம்.