சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்கும் போஸ்டர் ஒன்று, நடிகர் விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தலைவா பட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக நகரம் முழுவதும் வண்ணமயமான போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் என வைக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வித்தியாசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்து வெளிவந்த தலைவா பட போஸ்டரை மனதில் வைத்து ஜல்லிக்கட்டு போஸ்டரை உருவாக்கியுள்ளனர். 

அதாவது, மக்கள் தன்னைப் பார்த்து உற்சாகமாக குரல் எழுப்புவதை, அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சியுடன் கை அசைப்பதுபோல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும் விராலிமலை பொதுமக்கள், வியப்புடனே இதனை பார்த்துச் செல்கின்றனர்.  

போஸ்டரில் முதுகைக் காட்டிக் கொண்டு விஜயபாஸ்கர் நின்றவாறும், அவர் முன் உள்ள மக்கள் அரைப் பார்த்து கையசைப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில் தலைவா வருக வருக என உள்ளது. தலைவா என்ற தலைப்பின் மேல் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.  

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு, தனிப்பட்ட ஊர் விழாவாக இருந்து வந்த போட்டி, இப்போது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட விழாவாக மாறிவிட்டது. எனவே தன்னுடைய மாவட்டத்தில் எந்த பகுதியில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். அது மட்டுமல்லாது நடைபெறும் போட்டியை அவர்தான் கொடியசைத்தும் வைக்கிறார்.